ரூ.500 நோட்டுகளை திரும்பபெற மாட்டோம்- ரிசர்வ் வங்கி கவர்னர் பேட்டி!!
ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் அளித்த பேட்டியில் கூறியதாவது:- வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதங்களில் மாற்றமில்லை. ரிசர்வ் வங்கியில் நிதிக் கொள்கை குழு ரெப்போ வட்டி விகிதத்தை 6.5 சதவீதமாகவே நீட்டிக்க முடிவு செய்துள்ளது. இந்திய பொருளாதாரம் மற்றும நிதித்துறை வலுவாகவும், நெகிழ்ச்சியுடனும் உள்ளன. பணவீக்கம் கட்டுக்குள் இருக்கிறது. அதை ரிசர்வ் வங்கி தொடர்ந்து கவனித்து வருகிறது.
பணவீக்கம் 4 சதவீதத்துக்கும் மேலாக இருக்கும் என்று ரிசர்வ் வங்கி கணித்துள்ளது. ஆண்டின் பிற்பகுதியில் அப்படியே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பணவீக்க எதிர்பார்ப்பு களை உறுதியாக நிலை நிறுத்துவதற்கு நிதி கொள்கை குழு கொள்கை நடவடிக்கைகளை உடனடியாகவும், சரியானதாகவும் தொடர்ந்து எடுக்கும். நிதி கொள்கை குழுவின் நடவடிக்கைகள் விரும்பி முடிவுகளை தருகின்றன. வளர்ச்சிக்கு உள்நாட்டு தேவை நிலை ஆதரவாக உள்ளது. அன்னிய செலாவணி கையிருப்பு போதுமான அளவில் உள்ளது. இந்த நிதியாண்டில் முதல் காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 8 சதவீதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2024-ம் நிதியாண்டில் 6.5 சதவீத வளர்ச்சியை ரிசர்வ் வங்கி எதிர்பார்க்கிறது. 2024-ம் நிதியாண்டில் சில்லரை பணவீக்கம் 5.2 சதவீதம் இருக்கும் என்று கணித்திருந்த நிலையில் 5.1 சதவீதமாக குறைந்துள்ளது. பொருளாதாரத்தில் உற்பத்தி தேவைகளுக்கு போதுமான ஆதாரங்கள் உறுதி செய்யப்படும். மேலும் பணப்புழக்கம் மேலாண்மையில் ரிசர்வ் வங்கி சிறப்பாக செயல்படும். விலை மற்றும் நிதி ஸ்திரத் தன்மைக்கு ஏற்படும் அபாயங்களை கையாள்வதில் ரிசர்வ் வங்கி விழிப்புடன் செயல்படும். இந்த ஆண்டு ஜூலை முதல் இந்திய ரூபாய் மதிப்பு நிலையானதாக இருந்து வருகிறது.
வாபஸ் பெறுவதாக அறிவிக்கப்பட்ட ரூ.2000 நோட்டுகளில் 50 சதவீத நோட்டுகள் வங்கிகளுக்கு திரும்ப வந்துள்ளது. ரூ.1.80 லட்சம் கோடி வந்துள்ளது. இதில் 85 சதவீதம் டெபாசிட் செய்யப்பட்டதாகும். ரூ.500 நோட்டுகளை திரும்ப பெறும் எண்ணம் எதுவும் ரிசர்வ் வங்கிக்கு இல்லை. இதேபோல ரூ. 1000 நோட்டுகளை மீண்டும் அறிமுகப்படுத்தும் எண்ணமும் இல்லை. யூகங்களை பொது மக்கள் யாரும் நம்ப வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.