தேவை நாடும் மகளிரையும் இணைக்கும் செயற்பாடு!! (PHOTOS)
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பால் நிலை ஒப்புரவு மற்றும் சமத்துவத்திற்கான நிலையமானது பல்வேறுபட்ட சமூகம் சார்ந்த செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றது. அவ்வகையில் நன்கொடையாளர்களையும் தேவை நாடும் மகளிரையும் இணைக்கும் செயற்பாடுகள் வருடம் தோறும் ஏற்பாடு செய்யப்பட்டு நடாத்தப்படுகின்றது.
இவ்வருடத்திற்கான நன்கொடையாளர்களையும் தேவை நாடும் மகளிரை இணைக்கும் நிகழ்வானது நேற்றைய தினம் 8ம் திகதி ஆனி மாதம் 2023 வியாழக்கிழமை அன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பால் நிலை ஒப்புரவு மற்றும் சமத்துவத்திற்கான நிலையத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டு கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இடம் பெற்றது. இந்நிகழ்வில் மகளிருடைய வாழ்வாதார மேம்பாட்டிற்கும் கலைகளில் ஆர்வமுடைய மகளிரின் ஆற்றல்களை ஊக்குவிப்பதற்கும் நன்கொடைகள் வழங்கப்பட்டன.
அவ்வகையில் நலிவுற்ற வருமானத்தினை கொண்ட மகளிரின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் முகமாக இனங்காணப்பட்ட மூன்று மகளிரிற்கு பசுக்களை கொள்வனவு செய்யவதற்கான நிதி உதவிகளும் வழங்கப்பட்டன. மேலும் யுத்தத்தால் கண் பார்வை மற்றும் கால்களை இழந்த வன்னி விழிப்புலனற்றோர் சங்கத்தினை சேர்ந்த இரண்டு மகளிரிற்கு அவர்களின் வட இலங்கை சங்கீத சபைப்;பரீட்சைகளுக்கான தயார்படுத்தலுக்கு உதவக்கூடியவாறான வகையில் கிற்றார் மற்றும் ஓகன் இசைக்கருவிகளும் வழங்கப்பட்டன. தொடர்ந்து வட மாகாணத்தின் விசேட தேவையுடையோரிற்கான தொழிற்பயிற்சியினை வழங்கும் கிளிநொச்சி தொழிற்பயிற்சி நிலையத்தின் சமூக சேவை திணைக்களத்திற்கு தண்ணீர் சுத்திகரிக்கும் கருவியும் வழங்கி வைக்கப்பட்டது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர்களாலும் புலம் பெயர்ந்த தமிழர்களாலும் வழங்கப்பட்ட நன்கொடைகள் நிகழ்வின் போது யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சிவக்கொழுந்து சிறீசற்குணராஜா அவர்களால் வழங்கப்பட்டது.
மேலும் இந்நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட செயலாளர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் அவர்களும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பால் நிலை ஒப்புரவு மற்றும் சமத்துவத்திற்கான நிலைய உறுப்பினர்கள், நன்கொடை ஒழுங்கமைப்பாளர்கள், நன்கொடை வழங்கியவர்கள் மற்றும் நன்கொடை பெறுபவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.