;
Athirady Tamil News

மின்வெட்டை கண்டித்து போராட்டம்- ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு!!

0

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கடந்த சில வாரங்களாக ஆங்காங்கே மின்வெட்டு மக்களை வாட்டி வதைக்கிறது. கடந்த சில நாட்களாக ஆலந்தூரில் இரவு நேரங்களில் தொடர் மின் வெட்டு நிலவுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்து மின்சார வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டுள்ளனர். அனகாபுத்தூர், பொழிச்சலூர் மற்றும் பல்லாவரம் பகுதிகளிலும் இரவு நேரங்களில் மின்வெட்டு ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். திருவள்ளூர் சிட்கோ தொழிற்பேட்டையில் கடந்த இரு நாட்களாக மின்வெட்டு இருப்பதால் பல கோடி ரூபாய் உற்பத்தி பாதிக்கப்பட்டு இருப்பதாக தொழிற்சாலை உரிமையாளர்கள் போராட்டம் நடத்துகின்றனர். இந்தப் பிரச்சினை நான்கு மாதங்களாக இருப்பதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். காலையில் அலுவலகத்திற்கும், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் சென்று விட்டு திரும்பி வந்து வீட்டில் தூங்கலாம் என்று நினைத்தால், இரவு நேரங்களில் பல மணி நேர மின்வெட்டு ஏற்பட்டு தூக்கமே இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. முதியவர்கள், நோயாளிகள், கருவுற்ற தாய்மார்கள், குழந்தைகள் ஆகியோர் இரவு மற்றும் பகலில் அவ்வப்போது ஏற்படும் மின்வெட்டு காரணமாக தவிக்கின்றனர்.

தொழிற்சாலைகளின் உரிமையாளர்களோ உற்பத்தி பாதிக்கப்படுவதாக புலம்புகின்றனர். அம்மா ஆட்சிக் காலத்தில் மின் மிகை மாநிலமாக இருந்த தமிழகம் இன்று மின் குறை மாநிலமாக மாறியிருக்கிறது. இந்த நிலைமை நீடித்தால், அம்மா ஆட்சிக் காலத்தில் பொற்காலமாக இருந்த தமிழகம் விரைவில் கற்காலமாக மாறிவிடும் என்று எச்சரிக்கிறேன். தொழில்கள் வளர வேண்டும், தொழிலாளர்கள் வாழ வேண்டுமென்றால், தற்போது தமிழ்நாட்டில் நிலவி வரும் மின்வெட்டினை உடனே போக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த நிலை நீடித்தால், மாபெரும் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.