நீலகிரியில் 7 நாள் சுற்றுப்பயணம்: அவலாஞ்சி அணையை பார்வையிடும் கவர்னர் ஆர்.என்.ரவி!!
கவர்னர் ஆர்.என். ரவி 7 நாள் சுற்றுப்பயணமாக கடந்த 3-ந் தேதி தனது மனைவியுடன் நீலகிரிக்கு வந்தார். இதனை தொடர்ந்து கடந்த 5-ந் தேதி துணைவேந்தர்கள் மாநாட்டை கவர்னர் தொடங்கி வைத்தார். கடந்த 6-ந் தேதி ஊட்டி தொட்டபெட்டா மலை சிகரத்திற்கு சென்றார். அங்கு இயற்கை காட்சிகளையும், அதன் அழகினையும் கண்டு ரசித்தார். நேற்று கவர்னர் ஆர்.என்.ரவி தனது மனைவியுடன் ஊட்டி ரெயில் நிலையம் சென்றார். பின்னர் அங்கிருந்து மலை ரெயிலில் குன்னூர் சென்றார். அப்போது ஊட்டி-குன்னூர் இடையே கேத்தி பள்ளத்தாக்கின் இயற்கை காட்சி, படகு இல்லம், குகை பகுதிகளை கடந்து ரெயில் சென்றதை பார்த்து பரவசம் அடைந்தார். மேலும் நீலகிரியின் இயற்கை காட்சிகளையும் கண்டு ரசித்தார்.
அப்போது சுற்றுலா பயணிகளுடன் கவர்னர் ஆர்.என்.ரவி சகஜமாக பேசியபடி சென்றார். மேலும் குன்னூர் ரெயில் நிலையம் சென்றதும், ரெயில்வே ஊழியர்களுடன் குழு புகைப்படமும் எடுத்து கொண்டார். இந்த நிலையில் கவர்னர் ஆர்.என்.ரவி இன்று ஊட்டி அருகே உள்ள அவலாஞ்சி பகுதிக்கு செல்கிறார். அங்குள்ள மீன் பண்ணை, அவலாஞ்சி மின் நிலையம் உள்ளிட்டவற்றையும் கவர்னர் பார்வையிடுகிறார். தொடர்ந்து அவலாஞ்சி அணைக்கு சென்று, அணையின் அழகினையும், அதனை சுற்றியுள்ள காட்டின் இயற்கை காட்சிகளையும் கவர்னர் பார்த்து ரசிக்கிறார். கவர்னர் வருகையையொட்டி அங்கு வனத்துறையினர் பல்வேறு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.