;
Athirady Tamil News

83 ஆயிரம் பேரை பிரேமதாஸ அனுப்பினார் !!

0

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் வேண்டுகோள் தொடர்பில் எமது அரசாங்கம்
அவ்வாறு செயல்படப்போவதில்லை எனவும் எமது அரசாங்கம் அவ்வாறு பழிவாங்கும் அரசாங்கம்
அல்ல என்றும் அவரது தந்தை பிரேமதாசாவின் ஆட்சிக் காலத்தில் சிறு சம்பள அதிகரிப்பைக்
கோரி வேலை நிறுத்தப் போராட்டம் செய்தமைக்காக 83 ஆயிரம் பேர் வீட்டுக்கு
அனுப்பப்பட்டுள்ளார்கள் என்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன சுட்டிக்காட்டினார்.

அரசாங்க நிறுவனம் ஒன்றில் தொழிற்சங்கத்தை சார்ந்த அதிகாரி ஒருவர் அலுவலகத்தில் இருந்த
ஈமெயில் வசதிகளை உபயோகப்படுத்தினார் என்ற காரணத்திற்காக கொழும்பில் உள்ள பிரதான
அலுவலகத்தில் இருந்து அவர் கலவானை கிளைக்கு மாற்றப்பட்டுள்ளார் என்று
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை கேள்வி யொன்றை முன்வைத்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித்
பிரேமதாச குறிப்பிட்டார்.

அவ்வாறு இடம் பெற்றிருந்தால் அதனைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறும் பிரதமரைக்
கேட்டுக் கொண்ட போதே அதற்கு பதிலளித்த பிரதமர் மேற்குறிப்பிட்ட விடயத்தைத்
தெரிவித்ததுடன், மேலும் தெரிவிக்கையில்,

“சம்பந்தப்பட்ட அமைச்சுடன் அல்லது திணைக்களத்துடன் பேச்சு நடத்தி அதற்கான பதில்
வழங்கப்படும். தொழிற்சங்க தலைவர் ஒருவரின் பிரச்சினை தொடர்பாக சபையில் எதிர்க்கட்சித்
தலைவர் குரலெழுப்புவது தொடர்பில் நான் மகிழ்ச்சியடைகின்றேன்.அத்துடன்
வியப்புமடைகின்றேன்.

ஏனென்றால் அவரது தந்தையார் ரணசிங்க பிரேமதாசவின் காலத்தில் தொழிற்சங்கத் தலைவர்கள்
அனைவரும் வீட்டுக்கு அனுப்பப்பட்டார்கள். கொத்துக்கொத்தாக அவர்கள் வீட்டுக்கு
அனுப்பப்பட்டார்கள்.

சிறு சம்பள அதிகரிப்பைக் கோரி வேலை நிறுத்தப் போராட்டம் செய்தமைக்காக 83 ஆயிரம் பேர்
அவ்வாறு வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளார்கள். அந்த சமயத்தில் நாம் எதிர்க்கட்சியில் இருந்து

கொண்டு அவர்களுக்கு தொழில் வழங்குமாறு பல தடவைகள் கூறியும் அவர்களுக்கு தொழில்
வழங்கப்படவில்லை.

எனினும் எதிர்க்கட்சித் தலைவரது வேண்டுகோள் தொடர்பில் எமது அரசாங்கம் அவ்வாறு
செயல்படப்போவதில்லை எமது அரசாங்கம் அவ்வாறு பழிவாங்கும் அரசாங்கம் அல்ல” என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.