நிதிக்குழு தலைவரை நியமிக்க ஜனாதிபதி வரவேண்டுமா?
அரசாங்க நிதிக்குழுவின் தலைவரை நிறைவேற்று ஜனாதிபதி பாராளுமன்றத்துக்கு வந்து நியமிக்க வேண்டுமானால் சாபாநாயகருக்கு அந்த அதிகாரம் இல்லையா என்று எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவான லக்ஷ்மன் கிரியெல்ல எழுப்பினார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (08) விசேட கூற்றொன்றை முன்வைத்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உரையாற்றி பின்னர் மேற்குறிப்பிட்ட கேள்வியை கிரியெல்ல எம்.பி எழுப்பினார்.
முன்னர் உரையாற்றிய சஜித் தெரிவிக்கையில், “காலம் தாழ்த்தியாவது அரசாங்க நிதிக்குழுவின் தலைவர் பதவியை ஹர்ஷ டி சில்வாவுக்கு வழங்கியமை தொடர்பில் நன்றி தெரிவிக்கிறோம். இருந்தபோதும் அரசாங்க நிதிக்குழுவின் தலைவர் பதவியை அதற்கு தகுதியான ஹர்ஷ டி
சில்வாவை நியமிக்குமாறு நாங்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தபோதும் அவருக்கு தலைவர் பதவி கிடைக்காமல் இருப்பதற்கு சிலர் சதி செய்தனர்.
அதேநேரம் தற்போது ஹர்ஷடி சில்வா அரசாங்க நிதிக்குழுவின் தலைவராக
நியமிக்கப்பட்டுள்ளார். இருந்தபோதும் அவரை தலைவராக நியமிக்க நாட்டின் நிறைவேற்றதிகார ஜனாதிபதி பாராளுமன்றத்துக்கு வந்தா இதனை மேற்கொள்ள வேண்டும்?தாமதித்தேனும் இந்த பதவியை ஹர்ஷடி சில்வாவுக்கு வழங்க ஜனாதிபதி நடவடிக்கை எடுத்தமை தொடர்பில் அவருக்கு
நாங்கள் நன்றி கூறுகின்றோம்.
இருந்தாலும் நிலையியற் கட்டளையில் இல்லாத ஒன்றே இடம்பெற்றிருக்கிறது. ஜனாதிபதி வந்ததுதான் அரசாங்க நிதிக்குழுவின் தலைவர் பதவிக்கு நியமனம் வழங்க வேண்டும் என்றால் நிலையியற் கட்டளை தேவையில்லை.
அத்துடன் பல மாதங்களாக அரசாங்க நிதிக்குழுவின் தலைவர் நியமிக்கப்படாமல் இழுத்தடிப்பு செய்யப்பட்டது. அதில் பயங்கரமான விடயம் என்ன வென்றால், அந்த காலப்பகுதியில் சட்டவிரோதமான முறையில் பதில் தலைவர்களை நியமித்துக்கொண்டு, எந்தவித ஆய்வும் மேற்பார்வையும் இல்லாமல் சட்ட திட்டங்களை கொண்டுவர அனுமதியளிக்கப்பட்டிருந்தது.
எனவே பாராளுமன்றத்தின் கெளரவம் பாராளுமன்ற உறுப்பினர்களின் உரிமைகள் மற்றும் நிலையியற் கட்டளைகளை பாதுகாத்து, அதன் பிரகாரம் செயற்படுவது சபாநாயகராகிய உங்களது பொறுப்பாகும். இல்லாவிட்டால் அரசாங்க நிதிக்குழுவின் தலைவரை நியமிக்க
நிறைவேற்று ஜனாதிபதி பாராளுமன்றத்துக்கு வரவேண்டும் என புதிய நிலையியற் கட்டளை ஒன்றை கொண்டுவர வேண்டிவரும் வரும்”என்றார்.