நாகர்கோவிலில் இருந்து கோவை வந்த சொகுசு பஸ்சில் நர்சிடம் சில்மிஷம் செய்த வாலிபர் கைது!!
நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தை சேர்ந்தவர் 28 வயது இளம்பெண். இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் தலைமை நர்சாக வேலை பார்த்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர் விடுமுறையில் தனது சொந்த ஊருக்கு சென்றார். விடுமுறை முடிந்ததும் நர்சு கோவைக்கு புறப்பட்டார். நாகர்கோவிலில் இருந்து கோவை வந்த தனியார் சொகுசு பஸ்சில் ஏறி அவர் வந்தார். நர்சின் பின் இருக்கையில் வாலிபர் ஒருவர் அமர்ந்திருந்தார். இரவு நேரம் என்பதால் இருட்டை பயன்படுத்தி பின் இருக்கையில் இருந்த வாலிபர், நர்சிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த நர்சு சத்தம் போட்டார். இது குறித்து கண்டக்டரிடம் தெரிவித்தார். கண்டக்டர் சில்மிஷத்தில் ஈடுபட்ட வாலிபரை கண்டித்தார்.
ஆனால் எதையும் காதில் வாங்கி கொள்ளாத அந்த வாலிபர் தொடர்ந்து நர்சுக்கு தொல்லை கொடுத்து வந்தார். பஸ் காந்திபுரம் வந்ததும் நர்சு விரைந்து சென்று பஸ்நிலையத்தை ஒட்டியுள்ள காட்டூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் விரைந்து சென்று நர்சிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட வாலிபரை கைது செய்தனர். பின்னர் அவரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் குமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரியை சேர்ந்த கூலித் தொழிலாளி முருகன் (36) என்பது தெரிய வந்தது. அவரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.