விமான விபத்தில் சிக்கிய 4 குழந்தைகள்- 40 நாட்களுக்கு பின் உயிருடன் மீண்ட அதிசயம்!!
கொலம்பியா நாட்டில் கடந்த மே மாதம் 1-ந்தேதி ஒற்றை என்ஜின் கொண்ட சிறிய ரக விமானம் ஒன்று 6 பயணிகள் மற்றும் விமானி ஒருவருடன் புறப்பட்டு சென்றது. அந்த விமானத்தில் 4 குழந்தைகளும் பயணித்து உள்ளனர். இந்த நிலையில், திடீரென விமானம் விபத்தில் சிக்கியது. விமானத்தில் என்ஜினில் பழுது ஏற்பட்டு உள்ளது. இதனால், விமானி அவசரநிலையை அறிவித்து உள்ளார். இதன்பின் விமானம் வன பகுதிக்குள் விழுந்து நொறுங்கி உள்ளது. இதனால், அதனை கண்டறிவதில் மீட்பு குழுவினருக்கு சிரமம் ஏற்பட்டது. எனினும், 40 நாட்களாக விமானம் விழுந்த அமேசான் வன பகுதியில் தீவிர தேடுதல் வேட்டை நடந்தது.
இதில், விமானத்தில் பயணித்த விமானி, சிறுவர்களின் தாயார் உள்பட 3 பெரியவர்கள் உயிரிழந்தது தெரிய வந்தது. ஆனால், சிறுவர்கள் 4 பேர் உயிருடன் இருந்து உள்ளனர். அவர்கள் மீட்கப்பட்டனர். இதுபற்றி கொலம்பியாவின் அதிபர் கஸ்டாவோ பெட்ரோ கூறும்போது, இந்த சிறுவர்கள் தப்பி பிழைத்தவர்களுக்கான எடுத்துக்காட்டாக உள்ளனர். அவர்களின் காலம் வரலாற்றில் இடம்பெறும் என கூறியுள்ளார். விபத்தில் மீட்கப்பட்ட குழந்தைகளில் 11 மாத குழந்தை மற்றும் 4 வயது சிறுவனும் அடங்குவார்கள். அவர்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.