குவிக்கப்படும் அணு ஆயுதங்கள் – பேராபத்தை நோக்கி உக்ரைன்!
உக்ரைன் – ரஷ்ய யுத்தமானது மோசமான கட்டத்தை அடைந்து கொண்டிருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில், உக்ரைனுக்கு எதிராக தாக்குதல்களை தீவிரப்படுத்த எண்ணியுள்ள ரஷ்யா, பெலாரஸ் நாட்டில் அணு ஆயுதங்களை குவிக்க திட்டமிட்டுள்ளதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் கூறியுள்ளார்.
யுத்த நிலைமைகள் தொடர்பில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பெலாரஸ் நாட்டின் அதிபருடன் முன்பு மேற்கொண்ட ஒப்பந்தத்தின் பிரகாரம், ஜூலை 7 மற்றும் 8 ம் திகதியன்று பெலாரஸ் நாட்டில் அணு ஆயுதங்களை குவித்து வைக்கும் கிடங்குகளை அமைக்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
அந்தவகையில், அதற்கான வேலைகள் ஆரம்பமாகவுள்ளதாகவும், இந்த அணுவாயுதக் கிடங்குகள் ரஷ்ய இராணுவத்தின் கண்காணிப்பில் இருக்கும் எனவும் கூறியுள்ளார்.
அண்மையில் ரஷ்யாவிற்கு விஜயம் செய்திருந்த பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை மாஸ்கோ அதிபர் மாளிகையில் சந்தித்து பேசியுள்ளார்.
அந்த சந்திப்பில், உக்ரைன் விடயத்தில் பெலாரஸ் ரஷ்யாவுடன் இணைந்து செயற்பட தயார் என கூறியுள்ளார்.
இதன்பின்னர், பெலாரஸ் இராணுவம் ரஷ்யா இராணுவத்துடன் இணைந்து பயிற்சி மேற்கொள்வது, பெலாரஸ் நாட்டில் அணு ஆயுதங்களை சேகரித்து வைக்கும் கிடங்கை அமைப்பது போன்ற விடயங்கள் குறித்து ஒப்பந்தம் செய்யப்பட்டது.