10 தலித்துகள் கொல்லப்பட்ட வழக்கில் 42 ஆண்டுகளுக்குப்பின் 90 வயது முதியவருக்கு ஆயுள் – உத்தர பிரதேச நீதிமன்றம் தீர்ப்பு!!
உ.பி.யில் கடந்த 1981-ம் ஆண்டு 10 தலித்துகள் கொல்லப்பட்ட வழக்கில், 42 ஆண்டுகள் தாமதத்துக்குப்பின் 90 வயது குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
உத்தர பிரதேசம் மெயின்புரி மாவட்டத்தின் சாதுபூர் கிராமத்தில் கடந்த 1981-ம் ஆண்டு, ரேஷன் கடை உரிமையாளர் ஒருவர் மீது, தலித் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் புகார் தெரிவித்துள்ளார். உயர் வகுப்பைச் சேர்ந்த அந்த ரேஷன் கடை உரிமையாளர், புகார் கொடுத்த குடும்பத்தினரை பழிவாங்க முடிவு செய்தார். அனர் சிங் யாதவ் என்ற கொள்ளை கும்பல் தலைவனிடம், புகார் கொடுத்த குடும்பத்தினரை சுட்டுக் கொல்லும்படி ரேஷன் கடை உரிமையாளர் கூறியுள்ளார்.
அதன்படி புகார் கொடுத்த தலித் குடும்பத்தின் வீட்டுக்குள் புகுந்து ஒரு கும்பல் கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்தியது. வீட்டின் சமையல் அறையில் ரொட்டி சுட்டுக் கொண்டிருந்த சிறுமி, குழந்தைகள் உட்பட 10 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். காலில் குண்டு காயத்துடன் பிரேம்வதி என்ற பெண் மட்டும் உயிர் பிழைத்தார். இவரின் குழந்தைகள் துப்பாக்கி சூட்டில் இறந்து விட்டனர்.
இந்த வழக்கு தொடர்பாக 10 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த கொலை வழக்கு மெயின்புரி நீதிமன்றத்தில் நடந்து வந்தது. மெயின் புரி மாவட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டு ஃபிரோசாபாத் உருவாக்கப்பட்டபோது, கொலை வழக்கை பதிவு செய்த சிகோஹாபாத் காவல் நிலையம் ஃபிரோசாபாத் எல்லைக்குள் வந்தது. இதனால் இந்த கொலை வழக்கு கடந்த 2021-ம் ஆண்டு பிரோசாபாத் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கு நீண்டகாலமாக நிலுவையில் இருந்ததால், குற்றம்சாட்டப்பட்ட 10 பேரில் 9 பேர் இறந்து விட்டனர். கங்கா தயாள் என்பவர் மட்டும் உயிருடன் உள்ளார். ஜாமீனில் இருந்த இவருக்கு தற்போது வயது 90. இந்த வழக்கில் கடந்த மே 31-ம் தேதி தீர்ப்பளிக்கப்பட்டது. கங்கா தயாளுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.50,000 அபராதமும் விதித்து ஃபிரேசாபாத் மாவட்ட நீதிபதி ஹர்விர் சிங் தீர்ப்பளித்தார்.
இந்த தீர்ப்பு குறித்து, துப்பாக்கி சூட்டில் குழந்தைகளை பறிகொடுத்த 80 வயது பிரேம்வதி கூறுகையில், ‘‘இந்த கொலை சம்பவத்தின் முக்கிய குற்றவாளி தீர்ப்பு வழங்கப்படுவதற்கு முன்பே இறந்துவிட்டார்’’ என குறை கூறினார்.