;
Athirady Tamil News

எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரெயில் மீது மர்ம நபர்கள் சரமாரி கல்வீச்சு- கேரளாவை சேர்ந்த பயணி படுகாயம்!!

0

காரைக்காலில் இருந்து கேரள மாநிலம் எர்ணாகுளம் வரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று இரவு 8.30 மணி அளவில் திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தை வந்தடைந்தது. அங்கு பயணிகள் ஏறி, இறங்கினர். அதன் பின்னர் கரூர் நோக்கி அந்த ரெயில் புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. இந்த ரெயிலில் முன்பதிவு பெட்டிகள் மற்றும் பொது பெட்டிகளில் ஏராளமான பயணிகள் இருந்தனர். இந்த ரெயில் நேற்று இரவு 9 மணி அளவில் கரூர் மாவட்டம் குளித்தலை ரெயில் நிலையத்துக்கு முன்னதாக மருதூர் பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது மர்ம நபர்கள் சிலர் ரெயில் மீது சரமாரியாக கருங்கற்களை வீசி தாக்கினர்.

இந்தக் கற்கள் ரெயிலின் பொதுப் பெட்டியில் வந்து விழுந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் எதிர்பாராத விதமாக நிகழ்ந்த இந்த தாக்குதலால் ரெயிலில் இருந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதில் கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியை சேர்ந்த நிதின் (வயது 30) என்ற பயணியின் நெற்றி பொட்டில் கல் தாக்கியதில் அவருக்கு படுகாயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்தது. உடனடியாக சக பயணிகள் அவருக்கு முதலுதவி செய்தனர். மேலும் இது தொடர்பாக கரூர் ரெயில்வே போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். கல் வீசி தாக்குதல் சம்பவம் நடந்த போதும் ரெயில் நடுவழியில் எங்கும் நிறுத்தப்படவில்லை. தகவல் அறிந்த கரூர் ரெயில்வே போலீசார் ரெயில் நிலையத்தில் தயாராக நின்றனர்.

பின்னர் படுகாயம் அடைந்த கேரள பயணிக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை அளிக்க முயன்றனர். ஆனால் அவர் அதே ரெயிலில் ஊருக்கு புறப்பட்டுச் செல்ல விரும்பியதால் அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ரெயில்வே போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் இசையரசன், போலீஸ் ஏட்டு வேல்முருகன் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர். குடிபோதை ஆசாமிகள் கல் வீச்சில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. ஓடும் ரெயிலில் கல் வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.