தனியார் கல்வி நிறுவனங்கள் தொடர்பான யாழ் மாவட்ட செயலக தீர்மானம் – வரவேற்கும் சைவ மகா சபை!!
சிறார்களின் ஆன்மீக உளநல மேம்பாட்டை ஏற்படுத்தும் தனியார் கல்வி நிறுவனங்களை வெள்ளி ஞாயிறு இடைநிறுத்தும் யாழ்ப்பாண மாவட்ட செயலக தீர்மானத்தை சைவ மகா சபை வரவேற்றுள்ளது.
சைவ மகா சபை ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த செய்திக் குறிப்பில், 7 நாள் நெருக்கீட்டை குறைத்து இனிமையான இளம் பிராயத்தை சிறார்களுக்கு வழங்கவும் எதிர்பார்க்கும் வெள்ளி ஞாயிறு தனியார் வகுப்புக்களை நிறுத்தும் யாழ் அரச அதிபர் சிவபாலசுந்தரன் தலைமையில் பல்துறைசார்ந்தோர் எடுத்த தீர்மானம் காலத்தின் தேவை கருதிய மிக முக்கியமான ஒன்றாகும்.
மிகச்சிறந்த தீர்மானத்தை செயற்படுத்த முன்வந்த யாழ் அரச அதிபருக்கும் கல்வி நிர்வாக உளவளத்துணை சிறுவர் பாதுகாப்பு தரப்பினருக்கு பாராட்டுக்களும் நன்றிகளும் உரித்தாகுக.இதனை செயற்படுத்த பூரண ஒத்துழைப்பு வழங்கும் தனியார் கல்விப்புல தரப்பினரும் பாராட்டுக்குரியவர்களே.
மேற்படி தீர்மானம் பிள்ளைகளின் ஒய்வு ஆன்மீக செயற்பாடுகள் குடும்பத்துடன் செலவிடல் உளநலம் என்வபற்றில் இம்முடிவு மிகுந்த பங்களிப்பை செய்யும் எனவும் மாவட்டத்தில் பாரிய நெருக்கடியாக உருவெடுத்து வரும் இளையோரின் போதை பொருள்பாவனை விபத்துக்கள் தற்கொலைகளை தடுக்க இது பேருதவியாக அமையும் என நாம் நம்புகின்றோம்.
மேலும் 7நாட்களும் நெருக்கீட்டுடன் கல்வியை மட்டும் திணிப்பாக உட்செலுத்தினால் பிள்ளைக்கு ஏற்படும் மனப்பிறழ்வுகள் தொடர்பாகவும் மகிழ்ச்சியான இளம் பிராயத்தின் அவசியம் உத்திகள் தொடர்பாகவும் பெற்றோருக்கு தொடர் விழிப்புணர்வு நடாத்துவதிலும் அறநெறி கல்வியில் எமது பங்களிப்பை வழங்குவதற்கும் எம்மாலான பங்களிப்பை நல்க தயாராக உள்ளோம் என்பதையும் இச் சந்தரப்பத்தில் தெரியப்படுத்துகின்றோம்.
அனைத்து துறை சார்ந்தோரும் இத்திட்டத்தினை அமுல்படுத்த பூரண ஒத்துழைப்பை வழங்குவதன் மூலம் வளமான ஒழுக்க விழுமியமிக்க சிறந்த எதிரகால சமுதாயத்தை கட்டியெழுப்ப முடியும் என்பதில் ஐயமில்லை.இதே நேரம் பெற்றோர்கள் இத்திட்டத்திற்கு பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
கோவில்கள் வெள்ளி மாலை குறித்த நேரத்தில் பூசை சிறார்கள் பங்குகொள்ளும் வகையிலான கூட்டு பிரார்த்தனை வெள்ளி /ஞாயிறு காலை அறநெறி வகுப்புக்களை சிறப்பான முறையில் முன்னெடுக்கவும்.
பாடசாலைகள் சமய ஆசிரியர் ஊடாக பிள்ளைகள் ஆன்மீக நடவடிக்கைகளில் வெள்ளி ஞாயிறு ஈடுபடுவதை கண்காணிக்கும் பொறிமுறையை செயற்படுத்தவும் இச்சந்தர்ப்பத்தில் வேண்டுகின்றோம்.
இதற்காக உழைக்கும் மாவட்ட செயலர் உட்பட அனைத்து துறைசார் வல்லுநர்தளுக்கும் உத்தியோகத்தர்களுக்கும் சைவத்தமிழ் மக்கள் சார்பாக நன்றியறிதலை மீண்டும் வெளிப்படுத்துவதுடன் இறை சிவனின் அருளாசி கிடைக்க பிரார்த்திக்கின்றோம் – என்றுள்ளது.