மக்களுக்கு நீதி கிடைக்க தொடர்ந்து போராடுவேன்: சச்சின் பைலட் உறுதி !!
ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. முதல்-மந்திரி அசோக் கெலாட்டுக்கும், முன்னாள் துணை முதல்-மந்திரி சச்சின் பைலட்டுக்கும் இடையே மோதல் வலுத்துள்ளது. முந்தைய பா.ஜனதா ஆட்சி மீதான ஊழல் புகார்கள் குறித்து அசோக் கெலாட் அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று சச்சின் பைலட் கடந்த மாதம் போராட்டம் நடத்தினார். சச்சின் பைலட்டின் தந்தையும், மறைந்த முன்னாள் மத்திய மந்திரியுமான ராஜேஷ் பைலட் நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, சச்சின் பைலட், தனிக்கட்சி அறிவிப்பை வெளியிடுவார் என்று பரபரப்பு தகவல் வெளியானது.
ஆனால், காங்கிரஸ் மேலிடம் அதை மறுத்தது. இந்நிலையில், ராஜேஷ் பைலட் நினைவுநாளையொட்டி, தவுசா நகரில் உள்ள ஒரு விடுதியில் ராஜேஷ் பைலட் சிலையை சச்சின் பைலட் திறந்து வைத்தார். தனிக்கட்சி அறிவிப்பு எதுவும் வெளியிடவில்லை. நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:- என்னை பொறுத்தவரை, மக்களிடையே நம்பகத்தன்மை பெறுவதற்குத்தான் முதல் முன்னுரிமை அளிக்கிறேன். மக்கள் நம்பிக்கை, அவர்களுக்கு அளித்த வாக்குறுதிகள், நம்பகத்தன்மை ஆகியவைதான் அரசியலில் மிகப்பெரிய சொத்துகள் நான் அரசியலில் நுழைந்து கடந்த 22 ஆண்டுகளாக, இந்த நம்பிக்கை குறைந்து போகும் அளவுக்கு எந்த காரியமும் செய்யவில்லை.
இனிவரும் காலங்களிலும் அந்த நம்பிக்கைதான் எனக்கு மிகப்பெரிய சொத்து. அது எப்போதும் குறைந்துபோக விட மாட்டேன். இது சத்தியம். எத்தகைய சூழ்நிலையாக இருந்தாலும், மக்களுக்காக போராடி அவர்களுக்கு நீதி கிடைக்கச் செய்வேன். கோரிக்கைகளில் இருந்து பின்வாங்க மாட்டேன். நான் ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவராக இருந்தபோது, ஆட்சியில் இருந்த பா.ஜனதாவை துணிந்து எதிர்கொண்டேன். இவ்வாறு அவர் பேசினார்.