;
Athirady Tamil News

பள்ளி குழந்தைகள் சுமை குறைக்க ”நோ பேக் டே” அறிமுகம்- மாதத்தில் ஒருநாள் புத்தகம் தேவையில்லை!!

0

குழந்தைகள் 5 வயது பூர்த்தியான பின்னர் பள்ளிகளில் சேர்க்கப்பட்டனர். அப்படியே பள்ளிக்கு அழைத்துச் சென்றாலும் அங்குள்ள ஆசிரியர் குழந்தைகளை தலையை சுற்றி காதை தொடுமாறு கூறுவார். அப்படி காதை தொட்ட குழந்தைகள் தான் பள்ளியில் சேர்க்கப்பட்டனர். ஆனால் இன்று காலம் மாறிவிட்டது. 2½ வயது ஆகிவிட்டாலே மழலையர் பள்ளிகளில் குழந்தைகள் சேர்க்கப்படுகின்றனர். அவர்களுக்கு புத்தகம் பை வீட்டு பாடம் என ஆரம்பத்திலேயே சுமைகள் அதிகரிக்கிறது. கிலோ கணக்கில் மாணவர்கள் நோட்டு, புத்தகங்களை சுமந்து செல்வதால் நாளடைவில் அவர்களுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது. இதுதொடர்பாக பெற்றோர், பள்ளி நிர்வாகத்தினர் கவனிக்க வேண்டிய சில விஷயங்கள் குறித்து டாக்டர்கள் எச்சரிக்கை எடுத்துள்ளனர். பள்ளி மாணவர்களின் முதுகு எலும்பை பாதுகாப்பது பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் முக்கிய கடமையாகும். மாணவர்களின் தோள் பையின் எடை அதிகரிப்பதால் கழுத்து வலி, முதுகுவலி, தோள் பட்டை வலி மற்றும் முதுகு எலும்பு வளைதல் ஆகிய உடல்நல பாதிப்புகள் உண்டாகின்றன.

தவறான தோள் பையை பயன்படுத்துவது மற்றும் தோள் பையை தவறான முறையில் தொடர்ந்து பயன்படுத்துவதால் எதிர்காலத்தில் இளம் வயதிலேயே முதுகு கூன் விழுதல், சுவாச கோளாறு, முதுகு தண்டுவட சவ்வு விலகுதல் போன்ற பிரச்சனைகள் வரும் அபாயம் உள்ளது எனக் கூறியுள்ளனர். பள்ளிக் குழந்தைகளின் புத்தக பை சுமையை குறைக்க தெலுங்கானா மாநில அரசு இந்த கல்வியாண்டில் புதிய திட்டம் ஒன்றை தொடங்கியுள்ளது. தெலுங்கானாவில் மாணவர்களின் சுமையை குறைக்க வாரத்தில் ஒரு நாள் ‘நோ பேக் டே’ புதிய திட்டத்தை அரசு அறிவித்துள்ளது.

அதன்படி இந்த கல்வியாண்டு முதல் பள்ளிகளில் மாதாந்திர ‘நோ பேக் டே’ திட்டம் அமல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் ஒவ்வொரு மாதமும் 4-வது சனிக்கிழமையன்று இந்த ‘நோ பேக் டே’ கடைபிடிக்கப்படும். அந்த நாட்களில் புத்தக பை கொண்டு செல்ல வேண்டாம். ஆண்டு முழுவதும் மொத்தம் 10 பேக் இல்லாத நாட்கள் கடைபிடிக்கப்பட உள்ளது. இதன்மூலம் மாணவர்கள் புத்தக பையை சிரமத்தோடு சுமந்து வருவது தடுக்கப்பட்டுள்ளது. தெலுங்கானா மாநில கல்வி காலண்டர் வெளியிடப்பட்டது. அதில் ஜூன் 12, 2023 முதல் ஏப்ரல் 23, 2024 வரையிலான கல்வியாண்டில் ‘நோ பேக் டே’ நாளாக அறிவித்த தேதிகளை கோடிட்டு காட்டியுள்ளது.

இந்த ‘நோ பேக் டே’ நாளில் மாணவர்களுக்கு வாசிப்பு பயிற்சி, யோகா மற்றும் தியானம் உள்ளிட்ட சிறப்பு வகுப்புகள் நடைபெறும். இதுகுறித்து அந்த மாநில கல்விச் செயலாளர் கூறியதாவது:- இந்த ‘நோ பேக் டே’ நாளில் பள்ளி மாணவர்களுக்கு பாடங்களை தவிர மற்ற செயல்களில் ஈடுபடுவதற்கான வாய்ப்பு உருவாகி உள்ளது. இந்த ‘நோ பேக் டே’ நாள் கடைபிடிக்கப்படுவதால் யோகா, விளையாட்டு திறன் வளர்ப்பு பயிற்சி அளிக்கப்படும். இதன்மூலம் மாணவர்கள் கற்றல் திறன் மற்றும் பொது அறிவு வளரும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.