நாட்டுக்கு சேவை செய்வதில் பெருமைப்படுகிறேன்: பிரதமர் மோடி பெருமிதம்!!
பிரதமர் மோடி, முதல்முறையாக கடந்த 2014-ம் ஆண்டு மே மாதம் பிரதமர் ஆனார். 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று, அந்த ஆண்டு மே 30-ந் தேதி மீண்டும் பிரதமர் ஆனார். தொடர்ச்சியாக அவரது அரசு, 9 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. மோடி அரசின் 9-வது ஆண்டு விழா, ஒரு மாதம் கொண்டாடப்படுகிறது. பொதுக்கூட்டங்கள், பத்திரிகையாளர் சந்திப்புகள், பிரபலங்களுடன் சந்திப்புகள் என பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், தனது அரசின் 9-வது ஆண்டு விழாவையொட்டி, பிரதமர் மோடி தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:- தடையற்ற உறுதிப்பாட்டுடன் முன்னேறி நடைபோட்டுக் கொண்டிருக்கும் நாட்டுக்கு சேவை செய்வதில் பெருமைப்படுகிறேன். தற்சார்பு இந்தியா முதல் ‘மேக் இன் இந்தியா’ வரை, இந்தியா எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் நமது மக்களின் உணர்வுக்கும், வலிமைக்கும் ஆதாரங்களாக திகழ்கின்றன. இவ்வாறு அவர் கூறியுள்ளார். தேச பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிப்பது தொடர்பான ஒரு கட்டுரையை பிரதமர் மோடி, ‘டுவிட்டர்’ பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.