தமிழர் ஒருவரை இந்தியாவின் பிரதமராக்க முயற்சி – மகிழ்ச்சியில் ஸ்டாலின் !!
தமிழரை பிரதமராக்குவோம் என இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வெளியிட்ட கருத்தின் உள்நோக்கம் புரியவில்லை என தமிழ் நாட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாார்.
உள்துறை அமைச்சர் வெளிப்படையாக கூறினால் அதற்குரிய விளக்கத்தை வழங்க முடியும் என டெல்ரா பகுதிகளில் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை மதகுகளை திறந்து வைத்து கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டிற்கு பா.ஜ.க அரசு ஏராளமான திட்டங்களை கொண்டு வந்தது என உள்துறை அமைச்சர் அமித் ஷா பட்டியல் போட்டுள்ள போதிலும் பா.ஜ.க. ஆட்சி இருந்தபோது எந்த சிறப்பு திட்டங்களும் கடந்த 9 வருடத்தில் தமிழ்நாட்டுக்கு வரவில்லை என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
எனினும் காங்கிரசுடன் கூட்டணி இருந்த தி.மு.க. அப்போது ஆட்சியில் இருந்த மன்மோகன் சிங் தலைமையில் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட தனி சிறப்புகள் அனைத்தும் திட்டங்களாக கொண்டுவந்ததை பட்டியிடலிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
பா.ஜ.க.வினுடைய 9 ஆண்டு ஆட்சி காலத்தில் என்ன செய்திருக்கிறீர்கள் என என தாம் எழுப்பிய கேள்விக்கு எந்த பதிலும் இதுவரை வழங்கப்படவில்லை என முதல்வர் கூறியுள்ளாார்.
தமிழ்நாட்டில் இருந்து ஒருவர் பிரதமராக வர வேண்டும் என்ற அமித்ஷா பேசியுள்ளார். மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவின் உள்நோக்கம் என்னவென்று புரியவில்லை. அவர் வெளிப்படையாக சொன்னார் என்றால் அதற்கு உரிய விளக்கத்தை நம்மால் சொல்ல முடியும்.
தமிழரை பிரதமராக ஆக்க போகிறேன் என உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியது மகிழ்ச்சியாக இருக்கிறது என தெரிவித்துள்ள மு.க.ஸ்ராலின், பிரதமர் நரேந்திர மோடி மீது என்ன கோபம் என தெரியவில்லை எனவும் விமர்சித்துள்ளார்.
2024 ஆம் ஆண்டு பா.ஜ.க.வினுடைய பிரதமர் வேட்பாளராக தமிழர் வரவேண்டும் என்ற எண்ணம் இருந்தால் தமிழிசை, முருகன் இருக்கிறார்கள் எனவும் ஒருவேளை அவர்களுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கலாம் என தாம் எண்ணுவதாகவும் தமிழ் நாட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்திய நாடாளுமன்றத் தேர்தல் எதிர்வரும் 2024 ஆண்டு மே மாதமளவில் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அதற்கான வியூகங்களை வகுப்பதற்கு பாரதிய ஜனதாக் கட்சி தீவிரம் காட்டி வருகின்றது.
தமிழகத்திலும் பாரதிய ஜனதாக் கட்சியின் ஆட்சியை பலப்படுத்த வேண்டும் என்ற முனைப்புடன் புதிய நகர்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், தமிழர் ஒருவரை பிரதமாராக்க வேண்டும் என உள்துறை அமைச்சர் அமித் ஷா குறிப்பிட்டுள்ளார்.
பாஜக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழ் நாட்டிற்கு விஜயம் செய்துள்ளார்.
நேற்று, கோவிலாம்பாக்கம் சென்ற அமித் ஷா, அங்குள்ள தனியார் திருமண மண்டபத்தில் தென்சென்னை நாடாளுமன்ற தொகுதி பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலையொட்டி, தமிழ் நாட்டு பாரதிய ஜனதா கட்சியினருடன் இந்த ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழ் நாட்டு பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோரும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் உரையாற்றிய அமித் ஷா, தமிழ் நாட்டில் இருந்து ஒரு பிரதமர் வரவேண்டும் என்பதே தமது விருப்பம் என கூறியுள்ளார்.
தமிழ் நாட்டைச் சேர்ந்த காமராஜர், மூப்பனார் ஆகியோர் பிரதமர் ஆவதை தவறவிட்டுள்ளோம் எனவும் இவ்வாறு இருமுறை பிரதமர்களை தவற விட தி.மு.க.தான் காரணம் எனவும் அமித் ஷா குற்றஞ்சாட்டியுள்ளார்.
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் நாட்டில் 25 இடங்களில் வெற்றி பெற இலக்கு நிர்ணயிப்போம் எனவும் அதற்கான பணிகளில் அனைவரும் தீவிரமாக ஈடுபடவேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.