உக்ரைன் களமுனையில் உக்கிர மோதல்! முன்னேறும் துருப்புக்கள் – 16 கவச வாகனங்கள் அழிப்பு !!
கடுமையான சண்டைகளுக்கு மத்தியில் தனது படைகள் முன்னேறி வருவதாகவும் ரஷ்யா மீது இழப்புகளை ஏற்படுத்துவதாகவும் உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஜெலென்ஸ்கி கூறியுள்ளார்.
தெற்கு மற்றும் கிழக்கை ஆக்கிரமித்துள்ள ரஷ்ய துருப்புக்களுக்கு எதிராக தொடர்ந்தும் முன்னேறி வருவதாகவும், ஏழு கிராமங்களை கைப்பற்றியுள்ளதாகவும் உக்ரைனின் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் உக்ரைன் கடந்த சில நாட்களில் அமெரிக்கா வழங்கிய 16 புதிய கவச வாகனங்களை இழந்துள்ள விடயமும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
ரஷ்யாவின் தாக்குதலில் பிராட்லி காலாட்படை போர் வாகனங்கள் அழிக்கப்பட்டுள்ளதாகவும் சில சேதமடைந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி இறுதியில் 60க்கும் மேற்பட்ட பிராட்லிகளின் முதல் தொகுதி உக்ரைனுக்கு அனுப்பப்பட்ட நிலையில அவற்றில் சில தற்போது அழிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ரஷ்ய இராணுவத்துக்கு எதிரான உக்ரைனின் பதிலடித் தாக்குதல்கள் வார இறுதியில் பல முனைகளில் இடம்பெற்றதாக கூறும் உக்ரைனிய அதிபர் வொலோடிமிர் ஜெலென்ஸ்கி எதிர்த்தாக்குதல் மற்றும் தற்காப்பு நடவடிக்கைகளின் விவரங்களை அதிகம் வழங்கவில்லை.
இதற்கிடையே கருங்கடல் பரப்பில் உள்ள ரஷ்ய போர்க் கப்பல் மீது ட்ரோன் போட்ஸ் எனப்படும் 6 ஆளில்லா படகுகள் தாக்குதலை நடத்த முனைந்த போது தமது கப்பலுக்கு சேதமில்லாமல் குறித்த படகுகள் அழிக்கப்பட்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்துடன் இனிமேல் ஒப்பந்தங்களில் கையெழுத்திடபோவதில்லையென ரஷ்யாவின் தனியார் இராணுவ நிறுவனமான வாக்னர் வாடகைப் படை அறிவித்துள்ளமை இண்டு தரப்புக்கும் இடையே புதிய முறுகலை வெளிப்படுத்தியுள்ளது.
ரஷ்ய சார்ப்பு தன்னார்வப் பிரிவுகள் மற்றும் தனியார் இராணுவக்குழுக்கள் அனைத்தும் பாதுகாப்பு அமைச்சகத்துடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற அறிவிப்பை தொடர்ந்து வாக்னர் குழுவின் இந்த மறுப்பு வெளிவந்துள்ளது.