சில பகுதிகளில் தொடர்ந்தும் சிக்கல்!!
இலங்கையில் 3.9 மில்லியன் மக்கள் தொடர்ந்தும் மிதமான உணவுப் பாதுகாப்பற்ற நிலையில் காணப்படுவதாகவும், மொத்த சனத் தொகையில் 17 சதவீதம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் உணவு மற்றும் விவசாய அமைப்பு மற்றும் ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டம் ஆகிய இணைந்து, மேற்கொண்ட பயிர் மற்றும் உணவுப் பாதுகாப்பு மதிப்பாய்வுப் பணி (CFSAM) ஆய்வு அறிக்கையில் இந்த விடயம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டின் ஜுன்/ஜுலை மாதங்களுடன் ஒப்பிடுகையில் உவுப் பாதுகாப்பற்ற நிலை 40 சதவீதத்தால் குறைந்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
உணவுப் பாதுகாப்பின் முன்னேற்றம், சிறந்த உணவு நுகர்வில் இருந்து உருவாகிறது. இதற்கு இப் பணி முன்னெடுக்கப்பட்ட காலப்பகுதியில் காணப்பட்ட, உணவுப் பொருட்களின் விலை குறைப்பு மற்றும் அறுவடை காலத்தில் விவசாய சமூகங்களிடையே மேம்பட்ட வருமானம் ஆகியவை காரணமாக இருக்கலாம்.
கிளிநொச்சி, நுவரெலியா, மன்னார், மட்டக்களப்பு, வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் போன்ற சில மாவட்டங்களில் தொடர்ந்தும் உணவுப் பாதுகாப்பின்மை அதிகமாகவே உள்ளது. பெருந்தோட்டத் துறையில் உள்ள தேயிலைத் தோட்ட சமூகங்களுக்குள்ளும், அவர்களது பிரதான வருமான மூலமாக சமுர்த்தி போன்ற சமூக உதவித் திட்டங்களை நம்பியிருக்கும் தினசரி கூலித் தொழிலாளர்கள் மற்றும் குடும்பங்கள் மத்தியிலும் மிக உயர்ந்த அளவிலான தீவிரமான உணவுப் பாதுகாப்பின்மை கண்டறியப்பட்டுள்ளது.
2022/23ல் இரண்டு முக்கிய பயிர் பருவங்களில் அரிசி மற்றும் சோளம் உள்ளிட்ட தானியங்களின் உற்பத்தி 4.1 மில்லியன் தொன்களாக அதாவது, கடந்த ஐந்தாண்டு சராசரியை விட 14 சதவீதம் குறைவாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. போதுமானளவு உரங்கள் விநியோகிக்கப்படாமை மற்றும் அத்தியாவசிய பொருள் உள்ளீடுகளின் கட்டுப்படியாகாத தன்மை ஆகியவற்றால் ஏற்படும் மோசமான தாவர ஊட்டச்சத்து என்பன இதற்கான காரணங்களாகும். எவ்வாறாயினும், சிறு விவசாயிகளுக்கு பலதரப்பு மற்றும் இருதரப்பு நன்கொடை நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்ட நிதி மூலம் அரசாங்கத்தால் விநியோகிக்கப்படும் அத்தியாவசிய உரங்கள், உற்பத்தியில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இது சமீபத்தில் அறுவடை செய்யப்பட்ட 2022/23 பெரும் போகத்தில் முன்னேற்றத்தைக் காண்பித்துள்ளது. இது 2022 சிறுபோக உற்பத்தித்திறனுடன் ஒப்பிடுகையில் 12% அதிகமானதாகும்.
FAO/WFP கூட்டு பணிக் குழுவானது விவசாயிகளுக்கு உடனடி உதவிகளை வழங்குமாறு பரிந்துரைத்துள்ளது. குறிப்பாக தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் சிறுபோகத்தின் உற்பத்தி மற்றும் உற்பத்தித்திறனை அதிகரிக்க கையிருப்பிலுள்ள உரத்தை விநியோகிக்குமாறும், 2023/24 பெரும் போக பயிர்ச்செய்கை காலத்தில் உரங்களை இறக்குமதி செய்வதற்கான அவசர கொள்கை தீர்மானங்களை எடுக்குமாறும் பரிந்துரைத்துள்ளது. உர மானியத்தை குறைப்பது அல்லது நீக்குவது போன்ற எந்த ஒரு நடவடிக்கையும் படிப்படியாகவும் கட்டம் கட்டமாகவும் அமைய வேண்டும் என்றும் இது விவசாய சமூகம் இவற்றுக்கு தம்மை மாற்றிக் கொள்ள போதுமான கால அவகாசத்தை வழங்கும் என்றும் இந்த அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
ஏனைய பரிந்துரைகளில் உரக் கொள்முதல் மற்றும் விநியோகத்தை சீரமைக்க ‘உர விசேட பணிக்குழு’ நிறுவுதல் மற்றும் உர பயன்பாட்டு திறனை மேம்படுத்த காலநிலை திறன் விவசாயம் மற்றும் நிலையான விவசாய முறைகள் பற்றிய தகவமைப்பு ஆராய்ச்சியை வலுப்படுத்துதல் ஆகியவை அடங்கும். மேலும், கால்நடைகள் மற்றும் மீன்வளத் துறைகளில் ஏற்படும் பாதிப்பைக் குறைக்க, தீவனம் மற்றும் தீவனப் பயிர் உற்பத்தியை அதிகரிக்க போதுமான ஆதரவை வழங்குமாறு பணிக்குழு பரிந்துரைத்துள்ளது. அத்துடன், உணவுப் பாதுகாப்பின்மையால் மிகவும் பாதிக்கப்படக்கூடிய குடும்பங்களுக்கிடையில் உணவு அணுகலை எளிதாக்க உணவு மற்றும்/ அல்லது பண உதவியை தொடர்ந்து வழங்குதலும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.