ட்விட்டர் நிறுவனத்தை முடக்குவோம் என மிரட்டவில்லை: டோர்ஸி புகாருக்கு மத்திய அரசு மறுப்பு!!
மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் நேற்று கூறியதாவது. இந்தியாவில் உள்ள ட்விட்டர் நிறுவனத்தை முடக்கி, அதன் பணியாளர்களின் வீட்டில் சோதனை நடத்தியதாக அந்நிறுவனத்தின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரியும் (சிஇஓ), நிறுவனர்களில் ஒருவருமான ஜாக் டோர்ஸி கூறியுள்ளது அப்பட்டமான பொய் குற்றச்சாட்டு.
உண்மையில், ட்விட்டர் நிறுவனம் 2020 முதல் 2022 வரை இந்திய சட்டங்களை மதித்து செயல்படவில்லை. இறுதியாக ஜூன் 2022-லிருந்து மட்டுமே அவர்கள் இந்திய சட்டங்களை ஏற்று செயல்படுத்தத் தொடங்கினர்.
இதற்காக, யாரையும் மிரட்டவோ, சோதனை செய்யவோ, சிறைக்கு அனுப்பவோ இல்லை. ட்விட்டர் நிறுவனம் இந்திய சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு செயல்பட வைப்பதே எங்களின் முக்கிய நோக்கமாக இருந்தது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பிரேக்கிங் பாயிண்ட் யுடியூப் நேர்காணல் நிகழ்ச்சியில், வேளாண் போரட்டத்தின் போது அரசுக்கு எதிரான பதிவுகளை நீக்க இந்திய அரசு அழுத்தம் கொடுத்ததாக ட்விட்டர் நிறுவனத்தின் முன்னாள் சிஇஓ ஜாக் டோர்ஸி கூறியிருந்தார். இதற்கு மறுப்பு தெரிவித்ததையடுத்து, ட்விட்டர் நிறுவனம் இந்தியாவில் முடக்கப்படும் அச்சுறுத்தலை எதிர்கொண்டதாக கூறியிருந்தார். இந்தியாவைப் போன்றே, நைஜீரியாவிலும், துருக்கியிலும் தங்களது ட்விட்டர் நிறுவனம் முடக்கப்படும் சூழலை எதிர்கொண்டதாக தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், இந்தியா இறையாண்மை கொண்ட நாடு. எனவே, இங்கு செயல்படும் அனைத்து நிறுவனங்களும் நமதுசட்ட திட்டங்களுக்கு உட்பட்டே செயல்பட வேண்டும் என்று தெரிவிக்கும் உரிமை இந்தியாவுக்கு உண்டு என்றார்.