;
Athirady Tamil News

பிரம்மோஸ் ஏவுகணை 21-ம் நூற்றாண்டின் பிரம்மாஸ்திரம்: வெள்ளி விழாவில் மூத்த விஞ்ஞானி சிவதாணுப் பிள்ளை புகழாரம்!!

0

பிரம்மோஸ் ஏவுகணை 21-ம் நூற்றாண்டின் பிரம்மாஸ்திரம் என்று மூத்த விஞ்ஞானி ஏ.சிவதாணுப் பிள்ளை கூறினார்.

இந்தியா- ரஷ்யாவின் கூட்டு முயற்சியான பிரம்மோஸ் ஏவுகணையின் வெள்ளிவிழா ஆண்டு கொண்டாட்டங்கள் நேற்று முன்தினம் கோலாகலமாக நிறைவடைந்தன. டெல்லியில் நடைபெற்ற நிறைவு விழாவில் மூத்த விஞ்ஞானி ஏ.சிவதாணுப் பிள்ளை பங்கேற்று பேசியதாவது:

பிரம்மோஸ் திட்டத்தின் மூலம் சூப்பர் சானிக் ஏவுகணையை கொண்டுள்ள முதலாவது நாடு இந்தியா என்பது உலகிற்கு நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த வகையில் ஐந்தாவது நாடு என்ற கருத்து உடைக்கப்பட்டுள்ளதாக ராணுவத் தொழில்நுட்ப ஒத்துழைப்பு திட்டத்தில் இந்தியா-ரஷ்யா இடையேமுக்கியப் பங்களிப்பு செய்தவரும், பிரம்மோஸ் திட்டத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்தவரும், இந்தியாவின் ஏவுகணை மனிதர் என்று அழைக்கப்பட்டவருமான முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் ஒருமுறை கூறினார்.

ஏற்கெனவே, பிரம்மோஸ் பல மைல் கற்களை எட்டியிருந்தது. இந்த நிலையில், 1998-ம் ஆண்டு பிப்ரவரி 12-ல் கூட்டுமுயற்சித் திட்டம் தொடங்கப்பட்டு, 2001, ஜூன் 12-ல் முதலாவது பிரம்மோஸ் சூப்பர்சானிக் ஏவுகணை வெற்றிகரமாக செலுத்தப்பட்டது வரை இந்தத் திட்டம் முற்றிலும் தனித்தன்மையானது. எந்தவொரு சவாலையும் நாம் ஏற்றுக்கொண்டோம். எந்தவொரு சவாலையும் முடியாது என்று ஒருபோதும் நாம் கூறியதில்லை. பிரம்மோஸ் ஏவுகணை 21-ம் நூற்றாண்டின் பிரம்மாஸ்திரம். ஜனநாயகத்தில் பலம்வாய்ந்த நாடு மட்டுமே சமாதானத்தை முன்னெடுக்க முடியும். பிரம்மோஸ் போன்ற சக்திவாய்ந்த ஆயுதம் தான் உலகில் சமாதானத்தை முன்னெடுக்க இந்தியாவுக்கு பலத்தை அளித்தது.

இவ்வாறு சிவதாணுப் பிள்ளை பேசினார்.

நிகழ்ச்சியில் பிரம்மோஸ் திட்டத்தின் தலைவர் அதுல் டி ரானே பேசுகையில், “கூட்டு முயற்சி திட்டத்தை முன்னின்று தலைமை தாங்கும் தொலைநோக்குப் பார்வையை சிவதாணுப் பிள்ளைகொண்டிருந்தார். நாம் கொண்டிருந்த சிறந்த தலைவர்களில் இவரும் ஒருவர். பிரம்மோஸ் இன்று தூணாக நிற்கிறது என்றால் சிவதாணுப் பிள்ளை தான் அந்த தூணாக இருக்கிறார்” என்று பாராட்டினார்.

இந்த நிகழ்ச்சியின்போது பிரம்மோஸ் கலையரங்கை சிவதாணுப் பிள்ளை தொடங்கி வைத்தார். டாக்டர் ஏ.சிவதாணுப் பிள்ளை கலையரங்கு என இதற்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்தக் கலையரங்கின் நிறுவனர்கள் மாடத்தில் இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானி என்ற முறையில் அவரது சீரிய பணிக்காலத்தில் அவர் பெற்ற விருதுகளும் பட்டயங்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

விழாவில் பிரம்மோஸ் திட்ட துணைத் தலைமை நிர்வாக அதிகாரி சஞ்சீவ் கே.ஜோஷி, சந்தை ஊக்குவிப்பு மற்றும் ஏற்றுமதி பிரிவுஇயக்குநர் பிரவீன் பதக் மற்றும் பிரம்மோஸ் திட்ட விஞ்ஞானிகள், பொறியாளர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

ஹைதராபாத், நாக்பூர், பிலானி ஆகிய இடங்களில் உள்ள பிரம்மோஸ் பணி மையங்களிலும் வெள்ளி விழா கொண்டாட்டங்கள் நடைபெற்றன. இந்த விழாக்களில் அதுல் டி.ரானே காணொலி வாயிலாக ஊழியர்களிடையே உரையாற்றினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.