திருமணத்தின்போது 51 டிராக்டர்களுடன் ஊர்வலம் வந்து ஆச்சரியப்படுத்திய மணமகன்- வைரலாகும் வீடியோ!!
ராஜஸ்தான் மாநிலம் பார்மரில் நடந்த திருமண விழாவில் 51 டிராக்டர்களுடன் மணமகன் ஊர்வலம் வந்த நிகழ்வு அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. குடமலானி கிராமத்தைச் சேர்ந்த பிரகாஷ் சவுத்ரி என்பவருக்கும், ரோலி கிராமத்தைச் சேர்ந்த மம்தா என்பவருக்கும் நேற்று முன்தினம் திருமணம் நடந்தது. மணமகன் வீட்டிலிருந்து 51 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ரோலி கிராமத்திற்கு திருமண ஊர்வலம் புறப்பட்டது. இதில் 51 டிராக்டர்களுடன் மணமகன் ஊர்வலம் வந்து அசத்தினார். ஒரு டிராக்டரை மணமகனே ஓட்டினார். மொத்தமுள்ள 51 டிராக்டர்களில் 200க்கும் மேற்பட்ட நண்பர்கள் மற்றும் உறவினர்கள் பயணித்தனர். இதுகுறித்து மணமகன் கூறுகையில், “தனது குடும்பத்தின் பிரதான தொழில் விவசாயம். ஒரு விவசாயியின் அங்கீகாரமாக டிராக்டர் கருதப்படுகிறது.
அவரது தந்தையின் திருமண ஊர்வலம் ஒரு டிராக்டரில் புறப்பட்டது. எனவே, எனக்கு ஏன் 51 டிராக்டர்கள் ஊர்வலத்தில் இருக்கக்கூடாது என்று அனைவரும் நினைத்தனர்” என்றார். மேலும், மணமகனின் தந்தை, ஜெதாராம் கூறுகையில் “ஒரு டிராக்டர் ‘பூமியின் மகன்’ என்று கருதப்படுகிறது. என் தந்தை மற்றும் தாத்தாவின் ஊர்வலம் ஒட்டகங்களில் சென்றது. எங்கள் குடும்பத்தில் ஏற்கனவே 20-30 டிராக்டர்கள் இருந்தன. என் விவசாய நண்பர்களுடன் சேர்ந்து, அவற்றில் மொத்தம் 51 டிராக்டர்களை நான் பதிவு செய்தேன். காலையில் ஊர்வலம் புறப்பட்டபோது மேலும் 10-12 டிராக்டர்கள் சேர்ந்தன. டிராக்டர்கள் மூலம் விவசாயம் செய்கிறோம். அதற்கு ஏன் ஊர்வலம் செல்ல முடியாது? என்று நினைத்தோம். ஊர்வலம் கிராமத்தை அடைந்ததும், அனைவரும் ஆச்சரியமடைந்தனர்” என்றார்.