நியூசிலாந்தில் பொருளாதார மந்தநிலை: முக்கிய காரணியாக அமைந்த இயற்கை சீற்றங்கள்!!
கொரோனா வைரஸ் தொற்று பரவிய 2020-ம் ஆண்டு உலகின் பெரும்பாலான நாடுகள் தங்களது நாட்டின் எல்லைகளை முன்னெச்சரிக்கை காரணமாக மூடியது. முக்கியமாக ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகள் எல்லைகளை மூடுவதில் அதிதீவிரம் காட்டின. ஒரு பகுதியில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டாலே, உடனடியாக அந்த இடத்தையே தனிமைப்படுத்தியது நியூசிலாந்து. இதனால் ஏற்றுமதி மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டது.
வெளிநாட்டு தொடர்பை நீண்ட நாட்களுக்கு நிறுத்தி வைத்திருந்தது. இதனால் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டது. அதன்பின் நிலை சீராக பொருளாதாரம் ஓரளவிற்கு நிமிரத்தொடங்கியது. Powered By VDO.AI இந்த நிலையில் தற்போது 2020-ல் இருந்து முதன்முறையாக பொருளாதாரம் மந்தமான சூழ்நிலையை சந்தித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு முடிவில் பொருளாதார வீழ்ச்சி 0.7 சதவீதம் சரிந்த நிலையில், இந்த ஆண்டின் முதல் காலாண்டில் 0.1 சதவீதம் குறைந்துள்ளது. பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தாலும், அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. உலகளாவிய பொருளாதார மந்தநிலை 2023-ல் சவாலாக இருக்கும். பணவீக்கம் அதிகரிப்பு தொடர்ந்து உச்சத்தில் இருக்கும். வானிலை தொடர்ந்து இடையூறாக இருக்கும் என்பது எங்களுக்கு தெரியும் என நிதிமந்திரி கிரான்ட் ராபர்ட்சன் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் ஆக்லாந்தில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் பிப்ரவரி மாதம் கேப்ரியல் என்ற புயல் காரணமாக ஏற்பட்ட சேதம் ஆகியவை பொருளாதாரத்தை வெகுவாக பாதித்துள்ளது. மோசமான வானிலை காரணமாக மட்டும் நியூசிலாந்து 9 மில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு சேதத்தை எதிர்கொண்டுள்ளது. பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்து பணவீக்கம் 6.7 ஆக உள்ள நிலையில், அக்டோபர் மாதம் அங்கு தேசிய தேர்தல் நடைபெற இருக்கிறது. அப்போது இந்த விவகாரம் தலைதூக்கும் எனத் தெரிகிறது. நியூசிலாந்தில் விவசாயம், உற்பத்தி, போக்குவரத்து மற்றும் சேவைகள் என அனைத்து துறையிலும் சரிவு ஏற்பட்டுள்ளது என எதிர்க்கட்சி குற்றம் சாட்டியுள்ளது.