தூங்கிக்கொண்டிருந்தபோது தீ விபத்து- 5 குழந்தைகள் உள்பட 6 பேர் உயிரிழப்பு !!
உத்தரப்பிரதேசம் மாநிலம் குஷிநகர் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் சங்கீதா (38). இவருக்கு 10 வயது முதல் ஒரு வயதுக்குட்பட்ட 5 குழந்தைகள் உள்ளன. இந்நிலையில், நேற்று இரவு சங்கீதாவும் அவரது 5 குழந்தைகளும் வீட்டிற்குள் தூங்கிக் கொண்டிருந்தனர். சங்கீதாவின் கணவர் மற்றும் மாமனார், மாமியார் ஆகியோர் வீட்டின் வெளியே படுத்துள்ளனர். அப்போது, திடீரென வீட்டின் தகர கொட்டகை மீது தீ பரவியுள்ளது. தீ மளமளவென பரவி வீடு முழுவதும் எரிந்துள்ளது. இதை கண்டு அதிர்ந்த சங்கீதாவின் கணவர் மற்றும் குடும்பத்தினர் உள்ளே சென்று காப்பாற்ற முயன்றனர். ஆனால் அதற்கு சிலிண்டர் வெடித்து வீட்டிற்குள் இருந்த சங்கீதா உள்பட 6 பேரும் தீயில் கருகி உயிரிழந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்து சடலங்களை மீட்டனர். மேலும், சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் நடத்திய முதற்கட்ட விசரணையில், குறைந்த மின் அழுத்தம் காரணமாக தீ பிடித்துள்ளது என்றும் பின்னர் தீ பரவியதில் சிலிண்டர் வெடித்து சிதறியதும் தெரியவந்துள்ளது. இதைதொடர்ந்து, தீ விபத்தில் உயிரிழந்த சங்கீதா மற்றும் அவரது குழந்தைகளின் மறைவுக்கு அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்ததுடன் ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.