பாராளுமன்ற தேர்தல் இந்த ஆண்டிலேயே நடத்தப்படலாம்- நிதிஷ்குமார் பேச்சு!!
பாராளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இதில் 3-வது முறையாக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்ற பா.ஜனதா முயற்சி செய்து வருகிறது. அதே நேரம், பா.ஜனதாவை வீழ்த்த எதிர்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் ஈடுபட்டு வருகிறார். இது தொடர்பாக பாட்னாவில் வருகிற 23-ந்தேதி எதிர்கட்சிகளின் பிரம்மாண்ட கூட்டத்தை கூட்ட அவர் திட்டமிட்டுள்ளார். இந்நிலையில் பீகார் மாநிலத்தில் ரூ.6,680 கோடி மதிப்பிலான 5,061 சாலைகள் மற்றும் பாலங்கள் திட்டப்பணிகளை நிதிஷ் குமார் தொடங்கி வைத்தார். பின்னர் நடந்த நிகழ்ச்சியில் நிதிஷ்குமார் பேசியதாவது:- பாராளுமன்ற தேர்தல் எப்போது நடக்கும் என்று யாருக்கு தெரியும்? அடுத்த ஆண்டு தேர்தல் நடத்தப்பட வேண்டிய அவசியம் இல்லை.
அதற்கான எந்த உத்தரவாதமும் இல்லை. தேர்தல் முன்கூட்டியே (இந்த ஆண்டு) நடைபெறக்கூடும் என்பதால் பணிகளை விரைவாக செய்ய வேண்டும். திட்டங்களை விரைந்து முடிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார். மேலும், பிரதம மந்திரியின் கிராம் சதக் யோஜனா திட்டத்தில் மத்திய அரசின் பங்கை 100 சதவீதத்தில் இருந்து 60 சதவீதமாக குறைத்ததற்காக மத்திய அரசை நிதிஷ்குமார் தாக்கி பேசினார். பாராளுமன்ற தேர்தலை முன்கூட்டியே நடத்த வேண்டும் என்று நிதிஷ் குமார் வலியுறுத்தி வந்த நிலையில், இந்த ஆண்டே தேர்தல் நடத்தப்படலாம் என அவர் பேசி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.