உலகின் அழகான நகரங்களில் ஒன்றாக அயோத்தி இருக்கும்: யோகி ஆதித்யநாத் பெருமிதம்!!
உத்தரபிரதேசத்தின் அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோவில் கட்டப்பட்டு வரும் நிலையில், அந்த நகர் முழுவதும் ரூ.32 ஆயிரம் கோடியில் வளர்ச்சிப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் மூலம் உலகிலேயே மிக அழகான நகரங்களில் ஒன்றாக அயோத்தி மாறும் என முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், ‘500 ஆண்டு காத்திருப்புக்குப்பின் ராம பிரானின் சொந்த கோவிலில் அவரது சிலையை நிறுவுவது முக்கிய மைல்கல்களில் ஒன்றாக இருக்கும். உலக அளவில் அயோத்தியின் முக்கியத்துவத்தை மேம்படுத்தும் வகையில், இந்த வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வானது ஜனவரி மாதம் நடைபெற உள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார்’ என தெரிவித்தார். மேலும் அவர், ‘அயோத்தியின் பிரதான ரெயில் நிலையம் விரிவுபடுத்தப்பட்டு பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன.
அத்துடன் அயோத்தியில் கட்டப்பட்டு வரும் சர்வதேச விமான நிலையத்தின் கட்டுமான பணிகள் இந்த ஆண்டுக்குள் நிறைவுபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் ஒவ்வொரு பெரிய நகரமும் அயோத்தியுடன் இணைக்கப்படும். அயோத்தி, புதிய அயோத்தியாக மாறிவிட்டது. நகரில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சிப்பணிகள் முடிவடையும்போது, உலகிலேயே மிகவும் அழகான நகரங்களில் ஒன்றாக அயோத்தி அங்கீகரிக்கப்படும்’ என்றும் கூறினார்.