பிபோர்ஜோய் புயல்: 940 கிராமங்களில் கடும் பாதிப்பு- 2 பேர் பலி !!
அரபிக்கடலில் கடந்த 5-ந் தேதி உருவான பிபோர்ஜோய் புயல் அதிதீவிர புயலாக உருமாறியது. இது நேற்று மாலை குஜராத் மாநிலம் ஜாகவ் துறைமுகம் அருகே கரையை கடந்தது. புயலின் மையப்பகுதி நேற்று நள்ளிரவில் கரையை கடந்த போது ஜாகவ் துறைமுக பகுதியில் 125 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசியது. அப்போது கடலில் பல மீட்டர் உயரத்திற்கு அலைகளும் எழுந்தது. அதோடு கன மழையும் பெய்தது. புயல் கரையை கடக்கும்போது பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க முன் எச்சரிக்கை நடவடிக்கையாக ஒரு லட்சத்திற்கும் அதிகமான கடலோர கிராம மக்கள் பாதுகாப்பு முகாம்களுக்கு மாற்றப்பட்டனர்.
மேலும் தேசிய பேரிடர் மீட்பு படையை சேர்ந்த 15 குழுக்கள், மாநில பேரிடர் மீட்பு படையின் 12 குழுக்கள், பொதுப்பணித்துறையின் 115 குழுக்கள், மின்வாரியத்தின் 397 குழுக்கள் ஜாகவ் துறைமுக பகுதி மற்றும் கடலோர மாவட்டங்களில் தயார் நிலையில் இருந்தனர். பிபோர்ஜோய் புயலின் கோர தாண்டவத்தில் ஜாகவ் துறைமுக பகுதி, பவ்நகர் மாவட்டங்களில் சுமார் 940 கிராமங்களில் கடும்பாதிப்பு ஏற்பட்டது. இங்குள்ள கட்டிடங்களின் கூரைகள் தூக்கி வீசப்பட்டன. ராட்சத மரங்களும் வேரோடு சரிந்து விழுந்தது. சிறியதும், பெரியதுமாக சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரங்கள் முறிந்தது. மேலும் சூறைக்காற்றுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் 500-க்கும் மேற்பட்ட மின்கம்பங்களும் சரிந்து விழுந்தன. மரங்கள், மின்கம்பங்கள், கட்டிடங்கள் இடிந்ததில் அப்பகுதியில் இருந்த வாகனங்களும் சேதமானது.
பவ் நகர் மாவட்டத்தில் கட்டிட இடிபாடுகளில் சிக்கி 2 பேர் பலியானார்கள். 22-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதுபோல ஆடு, மாடு, நாய்கள் என 23-க்கும் மேற்பட்ட விலங்குகளும் இறந்தது. இதனை குஜராத் மாநில நிவாரண பணிகள் பிரிவு ஆணையர் அலோக் சிங் தெரிவித்துள்ளார். புயல் முன்னெச்சரிக்கை காரணமாக ஜாகவ், பவ் மாவட்டங்களில் நேற்றே மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்தது. நள்ளிரவு வீசிய சூறைக்காற்றில் ஏராளமான மின்கம்பங்கள் சரிந்து விழுந்ததால் அவற்றை சரிசெய்யும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். நேற்று நள்ளிரவே பேரிடர் மீட்பு குழுவினருடன் இணைந்து மின்வாரிய ஊழியர்கள் கிராமங்களில் சரிந்து விழுந்த மின்கம்பங்களை சீர் செய்யவும், முறிந்த மரக்கிளைகளை அப்புறப்ப டுத்தும் பணியிலும் ஈடுபட்டனர். இந்த பணிகள் முழுமையாக முடிந்த பின்னரே இக்கிராமங்களுக்கு மின் இணைப்பு கொடுக்க முடியும்.
இதற்கு இன்னும் ஒரு சில நாட்கள் ஆகும் என்று தெரிகிறது. அதுவரை இம்மாவட்டங்களை சேர்ந்த 940 கிராமங்கள் இருளில் மூழ்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பிபோர்ஜோய் புயல் பாதிப்பு குறித்து குஜராத் முதல்-மந்திரி பூபேந்திர படேலுடன் பிரதமர் மோடி போனில் தொடர்பு கொண்டு பேசினார். மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை உடனே மேற்கொள்ளவும், வனவிலங்கு சரணாலயங்களில் உள்ள விலங்குகள் பாதுகாப்பாக இருக்கிறதா? என்பதை கண்காணிக்கவும் கேட்டுக்கொண்டார். இதனை குஜராத் முதல் மந்திரி பூபேந்திர படேல் தெரிவித்தார். மேலும் மாநிலத்தில் புயல் நிவாரண பணிகளை விரைந்து மேற்கொள்ளுமாறு அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இதற்கிடையே நேற்று ஜாகவ் துறைமுகத்தில் கரையை கடந்தபின்பும் பிபோர்ஜோய் புயலின் சீற்றம் தணியவில்லை என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வழக்கமாக புயல் கரையை கடந்ததும் அது வலுவிழந்து இயல்பு நிலைக்கு திரும்பும். ஆனால் இப்போது ஜாகவ் துறைமுகத்தில் கரையை கடந்த பிபோர்ஜோய் புயல் இன்று காலை வடகிழக்கு திசை நோக்கி நகர்ந்தது. சவுராஷ்டிரா-கட்ச் வழியாக நகரும் புயல் 105 முதல் 115 கிலோ மீட்டர் வேகத்தில் சீற்றம் குறையாமல் ராஜஸ்தான் நோக்கி நகர்ந்து வருகிறது. இதன் காரணமாக ராஜஸ்தான் பகுதியில் கனமழை பெய்து வருகிறது.