;
Athirady Tamil News

யாருக்கும் நாங்கள் அடிமை இல்லை- அ.தி.மு.க.வை சீண்ட வேண்டாம்: எடப்பாடி பழனிசாமி ‘வீடியோ’ பதில்!!

0

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியோவில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை விமர்சனம் செய்திருந்தார். இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் விமர்சனத்துக்கு எடப்பாடி பழனிசாமி இன்று பதில் அளித்துள்ளார். இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறி இருப்பதாவது:- நேற்றைய தினம் செந்தில் பாலாஜியை ஊழல் குறித்து அமலாக்கத்துறை சோதனை நடத்தி அவரை கைது செய்தது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார். அதில் அ.தி.மு.க. பற்றியும், என்னைப் பற்றியும், சில கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்.

அதுகுறித்து மக்களுக்கு முழு உண்மையை சரியான முறையில் தெரிவிப்பது எனது கடமை. அதனால் இந்த கருத்துக்களை நான் தெரிவிக்கின்றேன். சுப்ரீம் கோர்ட்டில் செந்தில் பாலாஜியின் வழக்கு நடந்து வந்தது. அந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்பு அமலாக்கத் துறை, செந்தில்பாலாஜி வழக்கு குறித்து விசாரிக்கலாம். அதற்கு தடையில்லை. அதோடு 2 மாதத்தில் இந்த வழக்கை நடத்தி முடிக்க வேண்டும். அதன் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்றும், அதோடு அந்த வழக்கை 2 மாதத்தில் முடிக்காவிட்டால் சுப்ரீம் கோர்ட்டே சிறப்பு குழு ஒன்று அமைத்து விசாரிக்கப்படும் என்ற தீர்ப்பை வழங்கி இருக்கிறது.

அதன் அடிப்படையில்தான் அமலாக்கத்துறை, செந்தில் பாலாஜி வீடுகள், மற்றும் தலைமை செயலகத்தில் உள்ள அறைகளில் சோதனை நடத்தியது. அதோடு அவரும் விசாரிக்கப்பட்டார். நடைபயிற்சி சென்று விட்டு வீட்டுக்குள் நுழைந்து பத்திரிகையாளர்களை சந்திக்கின்றபோது, “நான் அமலாக்கத்துறைக்கும், வருமான வரித்துறை அதிகாரிகளுக்கும் முழு ஒத்துழைப்பு வழங்குவேன்” என்று தெரிவித்தார். ஆனால் அவ்வாறு அமலாக்கத்துறைக்கு ஒத்துழைப்பை வழங்கவில்லை என்று சம்பந்தப்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள். ஏற்கனவே இந்த வழக்கு குறித்து பலமுறை சம்மன் அனுப்பப்பட்டும் அதற்கு செந்தில்பாலாஜி உரிய முறையில் அமலாக்கத்துறை அதிகாரிகளிடம் ஆஜராகவில்லை. இருப்பினும் அமலாக்கத்துறை குறிப்பிட்ட காலத்துக்குள் அந்த விசாரணையை முடித்தாக வேண்டும் என்ற நிலையின் காரணமாக இந்த சோதனை நடைபெற்றது. அவரை கைது செய்து இருக்கிறார்கள்.

அவருக்கு உடல்நிலை சரியில்லை என்று தெரிந்தவுடன் அவருக்கு முறையாக சிகிச்சை அளிக்க வேண்டும் என்ற அடிப்படையில் ஓமந்தூரார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அவருக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவருக்கு பரிந்து பேசுகிறார். இன்னும் சொல்லப் போனால் அவர் வலைதளத்தில் பேசியபோது பதற்றத்தோடு பேசுகின்ற காட்சியை நான் பார்த்தேன். இந்த பதற்றத்துக்கு என்ன காரணம்? அ.தி.மு.க. ஆட்சிக்கு பிறகு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தி.மு.க. ஆட்சி வந்தது. எதற்காக உங்களுக்கு ஆட்சியை கொடுத்தார்கள்? நாட்டு மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற அடிப்படையில்தான் உங்களுக்கு இந்த ஆட்சியை தந்தார்கள். ஆனால் மக்களை பற்றி சிந்திக்கவில்லை.

மக்களுக்கு என்ன திட்டம் தேவை என்பதையும் சிந்திக்கவில்லை. இன்றைய தினம் செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தவுடன் இவ்வளவு பதற்றம் எதற்காக? மடியிலே கனம் இருக்கிறது, வழியிலே பயம் இருக்கிறது. இன்றைக்கு டாஸ்மாக் என்று எடுத்துக்கொண்டால் சுமார் 6000 மதுபான கடைகள் தமிழகத்தில் இருக்கின்றன. அதில் 5,600 பார்கள் இருக்கின்றன. அதில் சுமார் 3,500 பார்களுக்கு டெண்டரே விடவில்லை. சுமார் 2 ஆண்டு காலமாக இந்த முறைகேடாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற பாரை கண்டுபிடித்து தடுத்து நிறுத்துவது காவல் துறையின் கடமை. ஆனால் காவல் துறை இன்று தி.மு.க.வின் ஏவல் துறையாக மாறி விட்டது. விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச்சாராயம், போலி மதுபானம் அருந்தியவர்கள் 23 பேர் இறந்து விட்டார்கள். சேலத்தில் மட்டும் 27 பார்கள் முறைகேடாக நடைபெற்றது என்று சீல் வைக்கிறார்கள்.

திருவள்ளூரில் 72 பார்கள் முறைகேடாக நடைபெற்றதாக சீல் வைக்கிறார்கள். அதுவரை இந்த அரசுக்கு தெரியாதா? காவல் துறைக்கு தெரியாதா? 2 ஆண்டு காலம் முறைகேடாக பார் நடத்திக் கொண்டிருக்கிறார்கள் என்று சொன்னால் இதுபோல் தமிழகம் முழுவதும் 3,500 கடைகளுக்கு மேலாக முறைகேடாக பார் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 2 லட்சம் வாக்குகளை கூடுதலாக பெற்று இன்று ஆட்சியில் அமர்ந்திருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 ஆண்டு கால தி.மு.க. ஆட்சி, திராவிட மாடல் ஆட்சி என்று அறைகூவல் விட்டுக் கொண்டிருக்கின்ற முதலமைச்சர் இந்த 2 ஆண்டு காலத்தில் எந்த துறையையும் கவனிக்கவில்லை. எல்லா துறையிலும் வளர்ச்சி என்று சொல்கிறார். வளர்ச்சி எதிலே இருக்கிறது என்று சொன்னால் ஊழலில்தான் வளர்ச்சியாக இருக்கிறது. எல்லா துறைகளிலும் ஊழல்தான் வளர்ச்சி பெற்றிருக்கிறது.

எதுவுமே தெரியாமல், யாரோ எழுதி கொடுத்ததை வைத்து பேசுகின்ற முதலமைச்சர்தான் இன்றைய முதலமைச்சர். அவர் என்னைப்பற்றி சில கருத்துக்களை நேற்று வலைதளங்களில் குறிப்பிட்டு இருக்கிறார். ஒரு எதிர்க்கட்சி தலைவர் மீது ஒரு குற்றம் சுமத்த வேண்டும் என்று சொன்னால் அதை முழுமையாக தெரிந்து கொண்டு சொன்னால் பரவாயில்லை. ஏற்கனவே அ.தி.மு.க. ஆட்சி இருந்தபோது, தி.மு.க.வை சேர்ந்த ஆர்.எஸ்.பாரதி என் மீது நெடுஞ்சாலைத் துறையில் ரூ.4 ஆயிரம் கோடி ஊழல் செய்ததாக ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது ஐகோர்ட்டு நீதிபதி லஞ்ச ஒழிப்பு துறைக்கு ஒரு உத்தரவை பிறப்பித்தார். இதை விசாரித்து அந்த விசாரணை அறிக்கையை சீலிட்ட உறையில் ஐகோர்ட்டில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றார். அதன் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு துறையும் விசாரித்து அந்த விசாரணை அறிக்கையை மூடி முத்திரையிட்ட சீல் உறையில் ஐகோர்ட்டில் கொடுத்தார்கள். ஆனால் ஐகோர்ட்டு நீதிபதி அதை பிரித்து படிக்காமல் சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார்.

உடனே நான் சுப்ரீம் கோர்ட்டை அணுகி அதற்கு தடை வாங்கினேன். பிறகு ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. தி.மு.க. ஆட்சிக்கு வந்தது. ஆட்சிக்கு வந்தவுடன் அந்த தடையாணையை நீக்க வேண்டும் என்பதற்காக சுப்ரீம் கோர்ட்டில் வாதாடினார்கள். அப்போது சுப்ரீம் கோர்ட்டு தெளிவான தீர்ப்பை கொடுத்தது. மீண்டும் ஐகோர்ட்டில் அந்த வழக்கை நடத்த வேண்டும். அதுவும் ஏற்கனவே லஞ்ச ஒழிப்பு துறை சீலிட்ட அந்த அறிக்கையின் அடிப்படையில் வழக்கு நடைபெற வேண்டும் என்று தீர்ப்பு அளித்தது. அந்த தீர்ப்பின்படி ஐகோர்ட்டில் வழக்கு வந்தது. அந்த வழக்கு நடைபெற ஆரம்பித்தது. அப்போது மு.க.ஸ்டாலின் மூலமாக என் மீது ஒரு பொய்யான ஊழல் வழக்கை தொடர்ந்த ஆர்.எஸ்.பாரதி அவரே முன்வந்து இந்த வழக்கை நான் வாபஸ் பெற்றுக்கொள்கிறேன் என்று சொன்னார்.

நான் இந்த வழக்கை தொடர்ந்து நடத்துகிறேன் என்று கோர்ட்டில் சொன்னேன். எனக்கு மடியில் கனமில்லை வழியில் பயமில்லை, அதுதான் அ.தி.மு.க. முதலமைச்சருக்கு உண்மையிலேயே தில், திராணி இருந்தால் இந்த வழக்கை சந்திக்க வேண்டும். துணிச்சலுடன் சந்திக்க வேண்டும். நாங்கள் சந்திக்கிறோம் அல்லவா? அதைப் போல செந்தில்பாலாஜி மீது அமலாக்கத்துறை தொடர்ந்து உள்ள வழக்கை நேர்மையான முறையில் சந்தித்து வாதாடி கோர்ட்டில் நாங்கள் நிரபராதி என்று வெளியே வாருங்கள். அதைவிட்டு விட்டு ஏதேதோ பேசி மக்களை குழப்பி செந்தில் பாலாஜி ஒரு நல்லவர் என்ற தோற்றத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உருவாக்க பார்க்கிறார்.

இதே செந்தில்பாலாஜி பற்றி மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது, கரூர் பொதுக்கூட்டத்தில் குற்றம் சுமத்தி பேசினார். அப்படி இருக்கும்போது இன்றைக்கு செந்தில் பாலாஜி எப்படி நல்லவர் ஆனார். ஆனால் நாங்கள் அப்படியில்லை. கோர்ட்டில் நாங்கள் எந்த குற்றமும் செய்யவில்லை என்று வாதாடினோம். அந்த வழக்கை சந்தித்த கட்சி எங்கள் கட்சி. அ.தி.மு.க.வை இனி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சீண்டி பார்க்கக்கூடாது. இந்த ஊழலுக்கு அவருடைய கூட்டணி கட்சிகள் துணை போக வேண்டாம் என்று இந்த நேரத்தில் கேட்டுக் கொள்கிறேன். இன்று கூட்டணியில் இருப்பீர்கள்.

நாளைக்கு வெளியில் வந்து விடுவீர்கள். மக்களுக்கு எப்படி பதில் சொல்வீர்கள். அ.தி.மு.க., பா.ஜனதா கட்சியின் அடிமை என்று சொல்கிறார். அதே பா.ஜனதா கட்சியுடன் 1999-ல் கூட்டணி போட்டு பா.ஜனதா அமைச்சரவையில் தி.மு.க. எம்.பி.க்கள் அமைச்சர்களாக இடம் பெற்றார்கள். எனவே காலத்துக்கு ஏற்றவாறு தங்களை மாற்றிக் கொள்வார்கள். அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள், முன்னாள் அமைச்சர்கள் யாரும், எந்த கட்சிக்கும் அடிமையானவர்கள் அல்ல. சொந்த காலில் நினைக்கின்றவர்கள். தமிழ்நாட்டு மக்களுக்காக, உரிமைக்காக பாடுபடுகின்றவர்கள். எங்களுக்கு பதவி முக்கியம் அல்ல.

நாட்டு மக்களின் எண்ணங்களை நிறைவேற்றுவதுதான் அ.தி.மு.க.வின் லட்சியம். அது மட்டுமல்ல. சோதனை நடத்த வந்த வருமான வரித்துறையினர் பலர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்களால் தாக்கப்பட்டு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றார்கள். அப்போதெல்லாம் முதலமைச்சர் வாய் திறக்கவே இல்லை. தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு எந்த அளவுக்கு சீர் குலைந் துள்ளது என்பதற்கு இதுவே சான்று. எனவே அ.தி.மு.க.வை எந்த காலத்திலும் உங்களால் ஒன்றும் செய்ய முடியாது. ஒரு தொண்டனை கூட நீங்கள் தொட்டு பார்க்க முடியாது. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உருவாக்கிய இந்த இயக்கத்தை யார் அழிக்க நினைத்தாலும் அவர்கள் அழிந்து போவார்கள். காற்றோடு காற்றாக கரைந்து போவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.