முதலமைச்சர் உரிமையில் கவர்னர் தலையிடுவதை தவிர்த்து இருக்கலாம்- சபாநாயகர் அப்பாவு!!
அழகப்புரம் பகுதியில் இருந்து ராதாபுரம் கால்வாய் வழியாக விவசாய பாசனத்திற்கு தண்ணீர் திறக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் சபாநாயகர் அப்பாவு கலந்துகொண்டு தண்ணீரை திறந்து வைத்தார். அதனைத்தொடர்ந்து சபாநாயகர் அப்பாவு நிருபர்களிடம் கூறியதாவது:- ஜனநாயக நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களால் முதலமைச்சர் தேர்வு செய்யப்படுகிறார். அவர் தனக்கு வேண்டிய யாரையும் அமைச்சராக்கலாம். முதலமைச்சரின் முடிவிற்குள் யாரும் தலையிடக்கூடாது என்பது மரபு. யாருக்கு எந்த துறை கொடுக்க வேண்டும் என்பதும் முதலமைச்சரின் விருப்பம். செந்தில் பாலாஜி பதவியில் நீடிக்க கூடாது என்று கவர்னர் கூறுவதற்கு எந்த சட்டமும் இல்லை. செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்க முதலமைச்சர் உத்தரவு பிறப்பிக்கவில்லை. முதலமைச்சரின் உரிமையில் கவர்னர் தலையிடுவதை தவிர்த்திருக்கலாம்.
மதசார்புடைய நாடு என்று கவர்னர் பல இடங்களில் கூறுவது ஏற்புடையது இல்லை. கவர்னர் சட்டப்படி சட்ட ஆலோசனை பெற்று செயல்பட வேண்டும். முன்னாள் அமைச்சர் செந்தூர் பாண்டியன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போது, அமைச்சரவையில் எந்த இலாகாவும் இல்லாமல் இருந்து காலமானார் என்பது முன்னாள் முதலமைச்சருக்கு தெரியும் என்று நம்புகிறேன். தமிழகத்தின் கோவிலாக இருக்கும் தலைமை செயலகத்திற்குள் நுழைந்து, அமலாக்கத்துறை ஜனநாயக மாண்பை மீறி விட்டார்கள். பாராளுமன்றத்தை போன்று உயர் மதிப்பு, தமிழக சட்டப்பேரவைக்கும், தலைமை செயலகத்திற்கும் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.