குறையும் பிறப்பு விகிதம்: நவீன கருத்தரித்தல் சிகிச்சைகளை காப்பீடு திட்டத்தில் இணைத்த சீனா!!
சீனாவில் சமீப காலமாக குழந்தை பிறப்பு விகிதம் மிகக் கடுமையாக குறைந்துள்ளது. இதை தடுப்பதற்கும், தம்பதிகள் குழந்தை பெற்றுக் கொள்வதை ஊக்குவிக்கவும், பல முயற்சிகளை சீன அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக பீஜிங்கின் அரசு, நகரின் சுகாதாரப் பாதுகாப்பு அமைப்பின் கீழ் கருத்தரித்தலுக்கான 16 வகையான தொழில்நுட்ப சிகிச்சை கொண்டுவரப்படும் எனத் தெரிவித்துள்ளது. இந்த தொழில்நுட்பங்களில் முக்கியமானவையான இன்-விட்ரோ கருத்தரித்தல் (IVF), கரு மாற்று சிகிச்சை (Embryo Transplantation), விந்து உறைதல் (Freezing Semen) மற்றும் விந்துவை சேமித்தல் (Storing Semen) ஆகியவை அடிப்படை காப்பீட்டிலேயே சேர்க்கப்படும் என்று பெய்ஜிங்கின் நகராட்சி மருத்துவ காப்பீட்டு பணியகத்தின் துணை இயக்குனர் டு சின் தெரிவித்துள்ளார். கடந்த அறுபது ஆண்டுகளில் முதல் முறையாக மக்கள் தொகை வீழ்ச்சியை பதிவு செய்த சீனா, குழந்தை பிறப்பு குறைவதைத் தடுக்க போராடி வரும் நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குழந்தை பிறப்பு எண்ணிக்கை கடந்த ஆண்டு 1,000 பேருக்கு 6.77 என்றளவில் குறைந்திருக்கிறது. மேலும், 2023-ல் இது இன்னமும் குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கருவுறுதல் விகிதங்களை ஆதரிக்கும் வகையிலும் அதிகப்படுத்தும் வகையிலும் சீர்திருத்த, சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் கடந்த ஆகஸ்ட் மாதம் புதிய வழிகாட்டுதல்களை மாகாணங்களுக்கு வழங்கியுள்ளது. சீனாவின் வடகிழக்கில் உள்ள மாகாணமான லியோனிங், ஜூலை முதல் உதவி இனப்பெருக்க தொழில்நுட்பங்களை ஆதரிக்கும் என்று மே மாதம் கூறியது. திருமணமாகாத 35 வயதான சீனப் பெண்ணான தெரேசா சூ, திருமணமாகவில்லை என்ற காரணத்தால் தனது கரு முட்டைகளை உறைவிக்க பெய்ஜிங் பொது மருத்துவமனை மறுப்பதாகவும், இது தனது உரிமைகளை மீறும் செயல் எனக் கூறி, இதற்காக அந்த மருத்துவமனையின் மீது வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கிற்கான தீர்ப்பு விரைவில் வரவிருக்கும் நிலையில் பெய்ஜிங்கின் இந்த அறிவிப்பு வந்திருக்கிறது. கடந்த மார்ச் மாதம், சீனாவில் மக்கள் தொகையில் அதிகரித்து வரும் முதியோர்களும், தம்பதிகளிடையே குறையும் குழந்தை பிறப்பு குறித்தும் கவலை கொண்ட அரசாங்க அரசியல் ஆலோசகர்கள், திருமணமாகாத பெண்களுக்கு, கருமுட்டை உறைதல் மற்றும் இன்-விட்ரோ கருத்தரித்தல் சிகிச்சை போன்ற சேவைகள் அவர்கள் எளிதாக அணுகக்கூடிய விதத்தில் இருக்க வேண்டும் என்று முன்மொழிந்தனர்.
சீனாவில் உள்ள தேசிய சட்ட விதிகளின்படி தற்பொழுது நாட்டில் உள்ள திருமணமாகாத பெண்கள் இது போன்ற உயர் தொழில்நுட்ப சிகிச்சைகளை பெறுதல் கடினம். தென்மேற்கு சிச்சுவான் மாகாணம் போன்ற மாகாணங்களில் உள்ள சில தனியார் கிளினிக்குகள் குழந்தை பிறப்பு குறைவதால், ஏற்கனவே இன்-விட்ரோ கருத்தறித்தல் போன்ற தொழில்நுட்பங்களை அனுமதிக்கத் தொடங்கியுள்ளன. அதே சமயம், நாடு முழுவதும் கருவுறுதலுக்கான சிகிச்சைகளை தாராளமாக்குவதால், ஏற்கனவே உலகின் மிகப்பெரிய சந்தையாக இருக்கும் நாட்டில் இது அதிக தேவையை கட்டவிழ்த்துவிடலாம் என்றும் இதனால் வரையறுக்கப்பட்ட கருவுறுதல் சேவைகள் பாதிக்கப்படலாம் என்று முதலீட்டாளர்கள் மற்றும் தொழில்துறை நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.