ஐதராபாத்தில் பிரபலமாகும் புதிய வகை ‘ஸ்லூஷி’ குளிர்பானம்!!
வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதில் இருந்து தப்பித்துக்கொள்ள பொதுமக்கள் அனைவரும் குளிர்பானங்களை தேடித்தேடி பருகுகின்றனர். கரும்புச்சாறு, இளநீர் என்றென்றும் நமக்கு இளைப்பாறுதலை தரும் என்றாலும் எல்லோரையும் ஈர்க்கும் வகையில் புதிய ரக பானங்களை அறிமுகப்படுத்தி வருகின்றனர். மதுரை ஜில் ஜில் ஜிகர்தண்டா, பொள்ளாச்சி இளநீர், நன்னாரி சர்பத், கோலி சோடா என சாலையோரங்களில் குளிர்பானங்கள் விற்பனை களை கட்டுகிறது. இது ஒரு புறம் இருக்க தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் தற்போது ஸ்லூஷி என்ற ஒரு வகையான குளிர்பானத்தை பொதுமக்கள் அதிகமாக விரும்பி குடிக்கின்றனர். பெரிய மால் முதல் சாலையோர கடைகள் சிறிய ஓட்டல்கள் என ஐதராபாத் நகரில் வேகமாக இந்த குளிர்பானம் பிரபலம் அடைந்து வருகிறது. இதனை அங்குள்ள மக்கள் ஸ்லர்பி என்றும் அழைக்கிறார்கள். இந்த ஸ்லூஷி குளிர்பானம் நொறுக்கப்பட்ட பனிக்கட்டிகளில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இதனை பல்வேறு வண்ணங்களில் தயார் செய்து விற்பனை செய்கின்றனர்.
ஐதராபாத்திற்கு வரும் வட மாநிலத்தவர்கள் இதனை அதிக அளவில் சாப்பிடுவதால் நகர பகுதிகளில் இதன் விற்பனை களைகட்டி உள்ளது. இதனை தொடர்ந்து அதிகளவில் தயார் செய்து வருகிறோம் என அங்குள்ள வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இதுபற்றி ஐதராபாத்தை சேர்ந்த ஒருவர் கூறுகையில்:- ஸ்லூஷி குளிர்பானத்தை நான் முதன் முதலில் இங்கிலாந்தில் பருகினேன். அதை இங்கே பார்த்ததும் நான் ஆச்சரியப்பட்டேன். இது ஐஸ் சாப்பிடுவது போல் உள்ளது. சிறு வயதில் ஐஸ் சாப்பிட்ட ஒரு ஏக்க உணர்வை தருகிறது. இது சிறந்த சுவையுடையது. மேலும் உடலில் குளிர்ச்சியின் வேகத்தையும் அதிகரிக்கிறது என்றார்.