சவ ஊர்வலத்தின் போது பாடையில் மின்சாரம் பாய்ந்து 3 பேர் பலி!!
ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், குப்பம், தம்பி கானி பள்ளியை சேர்ந்தவர் ராணியம்மா (வயது 68). உடல்நல குறைவால் நேற்று முன்தினம் இறந்தார். அவரது இறுதி சடங்குகள் நேற்று நடந்தன. பின்னர் அவரது உறவினர்கள் ராணியம்மாவின் உடலை அலங்கரிக்கப்பட்ட பாடையில் வைத்து தூக்கிச் சென்றனர். சவ ஊர்வலத்தில் திரளானோர் கலந்து கொண்டு சென்றனர். சுடுகாடு அருகே சென்றபோது அந்த வழியாக மின்கம்பிகள் கைக்கு எட்டும் தூரத்தில் தொங்கிக்கொண்டு இருந்தன. இதனை கவனிக்காமல் உடலை தூக்கிச் சென்றபோது பல்லக்கு மின் கம்பியில் உரசி கம்பிகள் அறுந்து விழுந்தன. இதில் மின்சாரம் தாக்கி முனப்பா (45), ரவீந்திரன் (37), திருப்பதி (52) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக இறந்தனர். பிரகாஷ் என்பவர் படுகாயம் அடைந்தார். சவ ஊர்வலத்தில் வந்தவர்கள் பிணத்தை கீழே போட்டு விட்டு ஓடினர். இது குறித்து உடனடியாக குப்பம் போலீஸ் நிலையத்திற்கும் மின்வாரிய அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தனர். மின்வாரிய அதிகாரிகள் அப்பகுதியில் மின்சாரத்தை நிறுத்தினர்.
போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இறந்தவர்களின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குப்பம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின்சாரம் தாக்கி 3 பேர் இறந்த சம்பவத்திற்கு குப்பம் தொகுதி எம்.எல்.ஏ.வும் தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் இனிமேல் இது போன்ற சம்பவங்கள் நிகழாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் இறந்தவர்களின் குடும்பத்திற்கு நிவாரணமும், அரசு வேலையும் வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.