;
Athirady Tamil News

திருமணத்திற்கு வரன் தேடி தரும்படி அரசுக்கு கோரிக்கை மனு- கர்நாடகத்தில் ருசிகரம்!!

0

கர்நாடக மாநிலம் கதக் மாவட்டம் முண்டரகி தாலுகாவில் உள்ள தம்பல் கிராமத்தை சேர்ந்தவர் முத்து ஹுகாரா (வயது 28). வியாபாரியான இவர் மாதம் ரூ.50 ஆயிரம் சம்பாதித்து வருகிறார். இவர் தனக்கு திருமணம் செய்ய பெண் தேடும் படலத்தில் ஈடுபட்டார். சுமார் 2 ஆண்டுகளாக அவர் வரன் தேடியும் அவருக்கு பெண் கிடைக்கவில்லை. இதனால் வாழ்க்கையில் நொந்துபோன முத்து ஹுகாரா தம்பல் கிராம பஞ்சாயத்து வட்டார வளர்ச்சி அலுவலரிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்தார். அதில், நான் திருமணம் செய்து கொள்ள பெண் பார்த்து வந்தேன். ரூ.50 ஆயிரம் சம்பாதிக்கும் நிலையிலும் எனக்கு இதுவரை பெண் கிடைக்கவில்லை. எனக்கு சகோதரி, சகோதரர்கள் இல்லை. இதனால் வரன் தேடி அலைய முடியவில்லை.

எனவே கர்நாடக அரசு நான் திருமணம் செய்துகொள்ள பெண் பார்த்து தரும்படி கேட்டுக்கொள்கிறேன். சாதி தடை இல்லை. எந்த சாதியை சேர்ந்த பெண்ணாக இருந்தாலும் நான் திருமணம் செய்துகொள்வேன் என்று கூறியுள்ளார். மனுவை பெற்றுக்கொண்ட அதிகாரிகள் இதற்கு என்ன பதிலளிப்பது என குழப்பத்தில் உள்ளனர். ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்பு திருமணம் ஆகாத இளைஞர் ஒருவர் சாம்ராஜ்நகர் மாவட்டம் ஹனூர் அருகே மாதேஸ்வரன் மலையில் உள்ள மலை மாதேஸ்வரா கோவிலுக்கு நடைபயணம் சென்று நூதன வழிபாடு நடத்திய சம்பவம் நடந்தது. அதுபோல் கோலாரில் திருமணத்திற்கு பெண் கிடைக்காத வாலிபர் ஒருவர், முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமியிடம் தனக்கு வரன்தேடி தரும்படி கோரிக்கை விடுத்த நூதன நிகழ்வும் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.