சூடானின் உள்நாட்டு போரில் இரையாகும் சிறுவர்கள் – யுனிசெப் !!
சூடானில் நடைபெற்று வரும் உள்நாட்டு மோதலால் 330 ற்கும் மேற்பட்ட சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் குழந்தைகள் நலப் பிரிவான யுனிசெப் தெரிவித்துள்ளது.
கடந்த 2 மாத காலமாக நடைபெற்று வரும் இம்மோதலால், அந்நாட்டின் சிறுவர்களே அதிக பாதிப்புக்கு உள்ளாகி வருவதாக சூடானுக்கான யுனிசெப் நிறுவனத்தின் பிரதிநிதி மன்தீப் ஓ பிரையன் தெரிவித்துள்ளார்.
அத்துடன் சண்டையிடும் இரு தரப்பினருக்கும் இடையே சிக்கி ஏராளமான சிறுவர்கள் காயமடைந்தும், இருப்பிடங்களை விட்டு வெளியேறியும் வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில், சூடானில் 1.3 கோடி சிறுவர்கள் உடனடி நிவாரண உதவிகள் தேவைப்படும் நிலையில் உள்ளதாகவும் வலியுறுத்தியுள்ளார்.
அத்தோடு, அதிகார போட்டி காரணமாக கடந்த ஏப்ரல் 15 ஆம் திகதி முதல் நடைபெற்று வரும் மோதலால் சுமார், 2000 பேர் பலியாகியுள்ளதாக புள்ளிவிபர அறிக்கைகள் தெரிவிக்கின்றன.