பாதுகாப்பு துறையில் தற்சார்பு அடைய இந்தியா முயற்சி: ராஜ்நாத் சிங்!!
இந்திய ராணுவத்துறை சார்பில் பாதுகாப்பு துறையில் தன்னிறைவு அடைவது தொடர்பான குழு கூட்டம் பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் தலைமை வகித்து பேசியதாவது:- பாதுகாப்பு துறையில் நமது தேவையை பூர்த்தி செய்வது மிக முக்கியமானது. இந்த நோக்கத்தில் பாதுகாப்பு துறையில் இந்தியா தற்சார்பு அடைவதை உறுதி செய்ய முயற்சி செய்து வருகிறோம். இது தொடர்பாக மத்திய அரசு முடிவுகளால் இலக்கை அடைகிறோம். நாட்டின் பாதுகாப்பை அதிகரிக்க பெரும் முயற்சி மேற்கொண்டுள்ளோம். உலக அளவில் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ள நமது ராணுவத்தில் தொழில்நுட்ப ரீதியாக நவீனமயத்தை அறிமுகம் செய்து வருகிறோம்.
ராணுவத்திற்கான நிதி ஒதுக்கீடு அதிகரிப்பு, நடப்பு ஆண்டில் உள்நாட்டு நிறுவனங்களிடம் இருந்து பாதுகாப்பு உபகரணங்களை கொள்முதல் செய்ய 75 சதவீத நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அரசின் தீவிர முயற்சிகளால் நீர்மூழ்கி கப்பல், போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள், ஆயுதங்கள் உள்நாட்டில் சொந்த முயற்சியில் உற்பத்தி செய்யப்படுகின்றன. நமது பாதுகாப்பு உபகரணங்கள் உற்பத்தி நமது நாட்டின் தேவையை மட்டும் பூர்த்தி செய்யாமல், நமது நட்பு நாடுகளின் பாதுகாப்பு தேவைகளையும் பூர்த்தி செய்யப்படுகின்றன. கடந்த நிதி ஆண்டில் நமது பாதுகாப்பு உற்பத்தி ரூ.ஒரு லட்சம் கோடியை தாண்டியது.
இதில் ரூ.16 ஆயிரம் கோடி அளவுக்கு உபகரணங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன. இது நமது நாட்டின் பாதுகாப்புத்துறை சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது என்பதற்கு சாட்சி. பாதுகாப்பு துறையில் தன்னிறைவு அடையும் முயற்சிக்கு கட்சி பாகுபாடின்றி அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்குகிறார்கள். நாம் பாதுகாப்பு உபகரணங்களை ஏற்றுமதி செய்யும் நாடாக மாற வேண்டும் என்றால் நாம் அனைவரும் நாடு தான் முதன்மை என்ற ஒரு நிலைப்பாட்டில் நிற்க வேண்டும். அப்போது தான் தற்சார்பு நிலையை நாம் அடைய முடியும். இவ்வாறு ராஜ்நாத்சிங் பேசினார்.