உக்ரைனின் மூன்று டிரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டது: ரஷியா தகவல்!!
ரஷிய படைகளுக்கு எதிராக உக்ரைன் எதிர்தாக்குதல்களை தொடர்ந்து நடத்தி வரும் நிலையில், ரஷியாவின் தெற்கு எல்லைப்பகுதியான ‘பிரையான்ஸ்க்’ பகுதியில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை குறிவைத்து தாக்க வந்த 3 டிரோன்களை ரஷியா அழித்ததாகக் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பிரையான்ஸ்க் பிராந்தியத்தின் கவர்னர் அலெக்சாண்டர் போகோமாஸ் கூறியிருப்பதாவது:- நோவோசிப்கோவ் மாவட்டத்தில் உள்ள ‘ட்ருஷ்பா’ எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது உக்ரைன் நடத்திய தாக்குதலை ரஷிய வான்வெளி பாதுகாப்புப் படைகள் முறியடித்தன. எங்கள் ராணுவத்தின் நடவடிக்கைக்கு நன்றி.
இந்த தாக்குதலில் 3 டிரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. இவ்வாறு அவர் கூறினார். ஆனாலும், அவர் சேதத்தின் அளவு குறித்து எதுவும் கூறவில்லை. ரஷிய- உக்ரைன் போரில் சமீப காலங்களாக டிரோன் மூலம் நடைபெறும் தாக்குதல்கள் அதிகரித்துவிட்டன. உக்ரைனின் கிவ் மற்றும் ரஷியாவின் மாஸ்கோ, இரண்டுமே வாரத்திற்கு பலமுறை, சில டிரோன்களை விரட்டுவதாகக் கூறுகின்றன. போரில் ஈடுபடும் துருப்புகளுக்கு வழங்கப்பட வேண்டிய அவசியமான ஒன்று எண்ணெய். இதனால், ரஷிய மண்ணில் எண்ணெய் வசதிகள் உள்ள இடங்கள், உக்ரைனின் டிரோன் தாக்குதல்களின் முன்னுரிமை இலக்குகளாகத் தோன்றுகின்றன. கிரிமியா தீபகற்பம், ரஷியாவுடன் இணைக்கப்பட்டு விட்டது. இதனை மீட்டெடுக்கப்போவதாக கிவ் (உக்ரைன்) பலமுறை கூறியுள்ளது. இதனால், இந்த இடம் தொடர்ச்சியாக குறிவைக்கப்படுகிறது.
இந்த தீபகற்பத்தில் ரஷியப் படைகள், 9 டிரோன்களை வீழ்த்தியதாக, அந்த தீபகற்பத்திற்கு ரஷியாவால் நியமிக்கப்பட்ட கவர்னர், செர்ஜி அக்ஸியோனோவ் வியாழக்கிழமையன்று தெரிவித்தார். கடந்த வாரம், ரஷியாவின் தெற்கு நகரமான, ‘வோரோனெஜ்’ நகரில் உள்ள ஒரு குடியிருப்பு கட்டிடத்தை, ஆளில்லா விமானம் ஒன்று தாக்கி இருவர் காயமடைந்தனர். ஒரு மில்லியன் மக்கள் வசிக்கும், ‘வோரோனெஜ்’ நகரில், டிரோன்கள் பற்றிய முதல் தாக்குதல் குறித்த தகவல் இதுவாகும். வழக்கமாக தாக்குதலுக்கு உள்ளானதாக கூறப்படும் ரஷியாவின் எல்லை பகுதியில் உள்ள நகரங்களை போல் இல்லாமல், இந்நகரம் ரஷியாவிற்கு உள்ளே அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.