ஜேஇஇ நுழைவுத்தேர்வு முடிவுகள் வெளியீடு- அகில இந்திய அளவில் ஐதராபாத் மாணவர் முதலிடம்!!
நாடு முழுவதும் உள்ள முதன்மை தொழில்நுட்ப கழகங்களில் (ஐஐடி) பொறியியல் கல்வி பயில்வதற்காக தேசிய கூட்டு நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. நாட்டில் உள்ள ஏழு தொழில்நுட்ப கழகங்கள் இந்த தேர்வை சுழற்சி முறையில் நடத்துகின்றன. அந்த வகையில் இந்த முறை ஜெஇஇ அட்வான்ஸ்டு தேர்வை ஐஐடி கவுகாத்தி நடத்தியது. இந்த தேர்வுக்கான முடிவுகளை ஐஐடி கவுகாத்தி இன்று வெளியிட்டுள்ளது. தேர்வு முடிவுகளை அதிகாரபூர்வ இணையத்தளத்தில் (jeeadv.ac.in) மாணவர்கள் அறிந்துகொள்ளலாம். இணையதளத்தில் மாணவர்கள் தங்கள் பதிவு எண், பிறந்த தேதி ஆகிய விவரங்களை பதிவு செய்து, தேர்வு முடிவுகளை டவுன்லோட் செய்து கொள்ளலாம். தேர்வு முடிவுகளுடன் இறுதி விடைக்குறிப்பையும் ஐஐடி கவுகாத்தி வெளியிட்டுள்ளது.
இந்த தேர்வில் 360க்கு 341 மதிப்பெண்கள் பெற்று ஐதராபாத் மாணவர் வவிலாலா சித்விலாஸ் ரெட்டி அகில இந்திய அளவில் முதலிடத்தைப் பிடித்துள்ளார். பெண்களைப் பொருத்தவரை நயாகாந்தி நாக பவ்யா 298 மதிப்பெண்களுடன் முதலிடம் பிடித்துள்ளார். இவர் அகில இந்திய அளவில் 56வது இடத்தை பிடித்துள்ளார். இந்த அண்டு ஐதராபாத் மண்டலத்தில் இருந்து அதிக அளவிலான மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.