செர்பியாவில் அதிபருக்கு கடும் நெருக்கடி.. போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்த போராட்டக்காரர்கள் திட்டம்!!
செர்பியாவில் கடந்த மே மாதம் அடுத்தடுத்து நடந்த துப்பாக்கி 2 சூடு சம்பவங்களில் 18 பேர் கொல்லப்பட்டனர். 20 பேர் காயமடைந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் பெல்கிரேடில் உள்ள தொடக்கப்பள்ளி குழந்தைகள். இந்த சம்பவத்தை தொடர்ந்து அரசுக்கு எதிரான போராட்டம் வெடித்தது. துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்தும், அதிபர் அலெக்சாண்டர் வூசிக்கிற்கு எதிராகவும் போராட்டம் நடத்துகின்றனர். சம்பந்தப்பட்ட பாதுகாப்பு அதிகாரிகள் ராஜினாமா செய்யவேண்டும், வன்முறை தொடர்பான காட்சிகளை ஒளிபரப்பும் அரசு சார்பு ஊடகங்கள் மற்றும் செய்தி நிறுவனங்களின் உரிமங்களை ரத்து செய்ய வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
ஊடகங்களில் வன்முறை தொடர்பான செய்திகள் வருவதை தடுக்க அதிபர் அலெக்சாண்டர் வூசிக்கின் அரசாங்கம் தவறிவிட்டதாகவும், வன்முறை செய்திகள் சமூகத்தில் ஊடுருவ அனுமதித்ததாகவும் கூறுகின்றனர். 1990களில் பால்கனில் நடந்த போர்களில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர். அதிலிருந்து செர்பியாவில் தொடரும் வன்முறை கலாச்சாரத்திற்கு அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஊடகங்களே காரணம் என்று போராட்டக்காரர்கள் கூறுகின்றனர். சமீபத்தில் பெல்கிரேட் மற்றும் பல்வேறு நகரங்களில் அதிபருக்கு எதிராக ஆர்ப்பாட்ட பேரணிகள் நடத்தினர்.
இதில் ஏராளமானோர் கலந்துகொண்டு அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர். கடந்த சில வாரங்களாக அமைதியான முறையில் நடந்த போராட்டம் தற்போது மிகப்பெரிய போராட்டமாக மாறியிருக்கிறது. இதனை இன்னும் தீவிரப்படுத்த உள்ளதாக போராட்டக்காரர்கள் உறுதியேற்றுள்ளனர். நாடு முழுவதும் சாலை மறியலில் ஈடுபடுவதுடன், அரசு கட்டிடங்களை முற்றுகையிடவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர். இந்த போராட்டம் அரசுக்கு மிகப்பெரிய தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.