50 வருடத்திற்கு ஆம் ஆத்மி ஆட்சியை யாராலும் வீழ்த்த முடியாது: கெஜ்ரிவால்!!
ராஜஸ்தான் மாநிலத்தில் இந்த வருட இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. டெல்லி, பஞ்சாப் மாநிலங்களை தொடர்ந்து ராஜஸ்தானிலும் ஆதிக்கம் செலுத்த ஆம் ஆத்மி கட்சி விரும்புகிறது. இதற்கு முன்னோட்டமாக பஞ்சாப் மாநில முதல்வருடன் இணைந்து நேற்று ராஜஸ்தானில் கெஜ்ரிவால் பேரணி நடத்தினார். நேற்று நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் கெஜ்ரிவால் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- ஆம் ஆத்மி ஆட்சியை டெல்லி மற்றும் பஞ்சாபில் யாராலும் 50 வருடத்திற்கு வீழ்த்த முடியாது. நீங்கள் வரும் தேர்தலில் எங்களுக்கு வாக்களிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன்.
அப்படி செய்தால் ராஜஸ்தானில் இருந்தும் எங்களை 50 வருடத்திற்கு யாராலும் நீக்க முடியாது என்ற வகையில் சேவைகள் செய்து மக்கள் மனதில் இடம் பிடிப்போம். நாங்கள் இங்கே வரும்போது, அசோக் கெலாட் போஸ்டர்கள் கங்காநகர் முழுவதும் மற்றும் இந்த மைதானத்திலும் ஒட்டப்படிருந்ததை பார்த்தோம். அவர் கடந்த 5 வருடம் மக்களுக்காக உழைத்திருந்தால், இந்த போஸ்டர்கள் தேவையிருந்திருக்காது. பேரணியின்போது சிலர் இங்கே வந்து நாற்காலிகளை தூக்கி எறிந்து சேதப்படுத்தினர். இதெல்லாம் கோழைத்தனம். அசோக் கெலாட் 5 வருடம் ஏதும் செய்யவில்லை. இதனால் ஆம் ஆத்மியின் பேரணிகளை அழிக்க முயற்சிக்கிறார்கள். இவ்வாறு தெரிவித்தார்.