;
Athirady Tamil News

‘பாகுபலி’ சமோசா: அரை மணி நேரத்தில் சாப்பிட்டால் ரூ.71 ஆயிரம் பரிசு!!

0

நீங்கள் பல பிரமாண்ட வடிவங்களை பார்த்திருக்கலாம். ஆனால் 12 கிலோ எடையுள்ள பிரமாண்ட சமோசாவை பார்த்ததுண்டா? அதை பார்க்கவும், ருசிக்கவும் வேண்டும் என்றால், உத்தரபிரதேச மாநிலம் மீரட் நகரில் உள்ள ‘கவுஷல் சுவீட்ஸ்’ கடைக்குத்தான் போக வேண்டும். இங்குதான், 12 கிலோ எடை கொண்ட ‘பாகுபலி’ சமோசா தயாரிக்கப்படுகிறது, விற்கப்படுகிறது. கவுஷல் சுவீட்ஸ் கடையை 3-வது தலைமுறையாக நடத்தி வருபவர் சுபம் கவுஷல். இவருக்கு ஏதாவது வித்தியாசமாக செய்து வாடிக்கையாளர்களை கவர ஆசை. அப்போதுதான், பிரமாண்ட ‘பாகுபலி’ சமோசாவை தயாரிக்கும் யோசனை பிறந்திருக்கிறது. முதலில் 4 கிலோ சமோசாக்களையும், அடுத்து 8 கிலோ சமோசாக்களையும் தயாரித்தவர், தற்போது 12 கிலோ சமோசாவில் வந்து நிற்கிறார். இதன் உள்ளே இடப்படும், உருளைக்கிழங்கு, பட்டாணி, வாசனைப்பொருட்கள், பன்னீர் மற்றும் உலர்பழங்கள் அடங்கிய மசாலாவின் எடை மட்டும் 7 கிலோ. ஒரு ‘பாகுபலி’ சமோசாவை தயாரிப்பதற்கு சமையல் கலைஞர்களுக்கு 6 மணி நேரம் பிடிக்கிறது.

அதில், இந்த பிரமாண்ட முக்கோண வடிவத்தை எண்ணெயில் பொரிப்பதற்கு மட்டும் ஆகும் ஒன்றரை மணி நேரமும் அடக்கம். இந்த பாகுபலி சமோசா அறிமுகம் செய்யப்பட்டதுமே ‘ஹிட்’ ஆகிவிட்டது. பலரும் தங்கள் பிறந்தநாளின்போது ‘கேக்’குக்கு பதில் இந்த சமோசாவை வாங்கி வெட்டி பகிர்ந்து உண்டு மகிழ்கிறார்களாம். இதுவரை சுமார் 50 ‘பாகுபலி’ சமோசாக்கள் ஆர்டரின் பேரில் தயாரித்து வழங்கப்பட்டிருக்கின்றனவாம். வெளிமாநிலங்களில் இருந்துகூட, இதை தயாரித்து கொடுக்க முடியுமா என்று விசாரிக்கிறார்களாம். சமூக வலைதளங்களிலும் இது சரமாரியாய் ‘லைக்’குகளை அள்ளுகிறது.

இப்படி ‘பாகுபலி’யின் பலே பிரபலத்தால் உற்சாகம் அடைந்திருக்கும் கடைக்காரர் கவுஷல், ஒரு அதிரடி போட்டியையும் அறிவித்திருக்கிறார். அதாவது, தனிநபராய் அரை மணி நேரத்தில் இந்த சமோசாவை சாப்பிட்டு முடித்து ஏப்பம் விடுபவர்களுக்கு ரூ.71 ஆயிரம் பரிசு. கவுஷலின் கடையில் கம்பீரமாய் ‘அமர்ந்திருக்கும்’ பாகுபலி சமோசா, ‘என்னை சாப்பிட்டு பார்’ என்று மீரட் நகர மக்களை செல்லமாய் மிரட்டிக் கொண்டிருக்கிறது. எல்லாம் சரி, ஒரு பாகுபலி சமோசாவின் விலை என்ன என்று கேட்கிறீர்களா? ரூ.1500. ஆனால் சமோசா பிரியர்களுக்கு இந்த விலை ஒரு விஷயமே இல்லை என்பதற்கு, ‘பாகுபலி’க்கு வந்துகொண்டே இருக்கும் ஆர்டர்களே சாட்சி.

You might also like

Leave A Reply

Your email address will not be published.