;
Athirady Tamil News

உளவு செயற்கைக்கோள் ஏவும் முயற்சி தோல்வி: மிகக்கடுமையான குறைபாடு என கருதும் வடகொரியா!!

0

உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி வட கொரியா கடந்த சில ஆண்டுகளாகவே அணுஆயுத சோதனைகளை மேற்கொண்டு வருகின்றது. இவற்றிற்கு அமெரிக்கா உட்பட பல மேற்கத்திய நாடுகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து ஒரு சில பதில் நடவடிக்கைகளும் எடுத்து வருகின்றன. இந்நிலையில் கடந்த மே மாதம், தங்கள் நாட்டின் முதல் உளவு செயற்கைக்கோளை தாங்கிய ராக்கெட் ஒன்றை வட கொரியா செலுத்தியது. ஆனால் புறப்பட்ட சில மணி நேரத்திலேயே அந்த ராக்கெட் செயலிழந்தது. அமெரிக்காவையும், தென்கொரியாவையும் உளவு பார்க்கும் முயற்சியாக செயல்பட்ட இந்த ராணுவ நடவடிக்கை தோல்வியடைந்தத்து, வட கொரியாவிற்கு இது மிகவும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. அந்நாட்டதிபரும், சர்வாதிகாரியாக செயல்பட்டு வரும் தலைவருமான கிம் ஜாங் உன் இதை மிகப்பெரிய தோல்வி நடவடிக்கையாக உணர்வதாகவும், இதனால் மிகவும் அதிருப்தியிலுள்ளார் எனவும் அங்கிருந்து வரும் செய்தி குறிப்பொன்று தெரிவிக்கிறது. இந்த செய்திகளிலிருந்து மேலும் சில விவரங்கள்:- அனைத்து உயரதிகாரிகளும் கலந்து கொண்ட ஆளும் கட்சியின் 3-நாள் சந்திப்பில், இந்த தோல்வி விரிவாக அலசப்பட்டிருக்கிறது. இதில் அதிபர் கிம் கலந்து கொண்டிருக்கிறார்.

ராக்கெட் செலுத்துவதற்கான ஆயத்தப்பணிகளில் ஏற்பட்ட குறைபாடுகளுக்காக, இதற்கு காரணமான சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மிகவும் விமர்சிக்கப்பட்டுள்ளார்கள். தவறுகளுக்கான காரணங்களை கண்டறிந்து, தோல்வியிலிருந்து கற்க வேண்டிய பாடங்களையும் விரைவாக கற்று, மீண்டும் அடுத்த ஒரு ஏவுகணையை செலுத்தியாக வேண்டும் என அவர்கள் நிர்பந்தப்பட்டுள்ளார்கள் என தெரிகிறது. இருப்பினும் வடகொரியாவின் உளவுத்துறை, ராக்கெட் தோல்விக்கு காரணம் என்னவென்று கண்டறிவதற்கு சில வாரங்களுக்கு மேல் ஆகலாம் என தெரிவித்திருக்கிறது.

அடுத்து ராக்கெட் எப்பொழுது விண்ணில் செலுத்தப்படும் என தெரியவில்லை. வட கொரியாவை கண்காணிக்கும் அமைப்புகள், இந்த தோல்விக்காக, எந்த அதிகாரியும் அல்லது விஞ்ஞானியும் பணி நீக்கமோ அல்லது தண்டனைக்குரிய நடவடிக்கைகளுக்கோ ஈடுபடுத்தப்படவில்லை என தெரிவிக்கின்றன. அமெரிக்க தலைமையிலான வட கொரிய விரோத வெறுப்பு நடவடிக்கைகளை சமாளிப்பதற்கான எதிர்வினையாக அதிபர் கிம், பல உயர் தொழில்நுட்ப ராணுவ சொத்துக்களை உருவாக்கவும், ஆயுதங்களை சேமித்து வைத்துக் கொள்ள போவதாக உறுதியளித்துள்ளார். பலமுனை- ஏவுகணைகள், அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்கள், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள், மற்றும் ஒலியின் வேகத்தை விட பல மடங்கு வேகமாக செல்லும், (ஹைப்பர்சோனிக்) ஏவுகணைகள் ஆகியவை அவர் சேகரிக்க விரும்பும் மற்ற ஆயுத அமைப்புகளாகும். 2022-ம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து, வடகொரியா, 100-க்கும் மேற்பட்ட ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டுள்ளது.

இவற்றில் சில, உளவு ஏவுகணை சம்பந்தமாகவும், கிம்மின் விருப்பப்பட்டியலில் உள்ள சக்திவாய்ந்த ஆயுதங்களை உருவாக்குவது தொடர்பாகவும் உருவாக்கப்பட்டவையாகும். இந்த சந்திப்பின்போது, வடகொரிய அரசாங்கத்தின் முக்கிய முடிவுகளை எடுக்கும் வல்லமை கொண்ட பொலிட்பீரோ உறுப்பினர்கள், இந்த பிராந்தியத்தில் வட கொரியாவின் போட்டி நாடுகளின் பொறுப்பற்ற போர் நகர்வுகளால் தென்கொரிய- அமெரிக்க கூட்டு நடவடிக்கைகளை குறிப்பிட்டு மிகவும் மோசமடைந்து வரும் பாதுகாப்பு நிலைமையை விரிவாக ஆய்வு செய்திருக்கின்றனர்.

அமெரிக்க எதேச்சதிகாரத்தை எதிர்க்கும், வடகொரியாவின் நேச நாடுகளுடன் உள்ள உறவுகளை மேலும் வலுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்தும் போலிட்பீரோ விவாதித்துள்ளது. வட கொரியாவின் அதிகரிக்கும் ராணுவ பலம் பெருக்கும் நடவடிக்கைகளுக்கும், அணுஆயுத பரிசோதனைகளையும் எச்சரிக்கும் விதமாக அமெரிக்காவும் தென் கொரியாவும் இணைந்து எதிர்நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும், வட கொரியா அணு ஆயுத சோதனைகளை மேற்கொண்டால், அது வட கொரியாவின் அழிவில் முடியும் என எச்சரித்துள்ளது. ரஷிய நாட்டுடன் உறவை வலுப்படுத்த வேண்டி, அந்நாடு உக்ரைனை ஆக்ரமித்ததையும் வட கொரியா ஆதரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வர்த்தகம், தொழில்நுட்பம், பிராந்திய முதலிடம் போன்ற விஷயங்களில் அமெரிக்காவோடு எதிர்ப்பை கடைபிடிக்கும் சீனாவோடும் வட கொரியா உறவுகளை மேம்படுத்தும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஐ.நா. பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பினர்களாக விளங்கும் சீனாவும், ரஷியாவும் தங்கள் வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி, வட கொரியாவின் அணுஆயுத பரிசோதனைகளுக்காக அதன் மீது அமெரிக்கா கொண்டு வர நினைக்கும் தடை முயற்சிகளுக்கு முட்டுகட்டை போடுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.