;
Athirady Tamil News

காங்கிரசுடன் தனது கட்சியை இணைக்க ஷர்மிளா முடிவு? !!

0

தெலுங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வர காங்கிரஸ் மேலிடம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதற்காக கர்நாடக மாநில துணை முதலமைச்சர் டி.கே. சிவகுமார் கர்நாடகாவை போல் தெலுங்கானாவிலும் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு கொண்டுவர திட்டமிட்டு வருகிறார். இந்த நிலையில் ஆந்திர முன்னாள் முதலமைச்சர் ராஜ சேகர ரெட்டியின் மகளும் ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகனின் சகோதரியுமான ஷர்மிளா. ஒய் எஸ்.ஆர் தெலுங்கானா கட்சி தலைவராக உள்ளார். இவர் தெலுங்கானாவில் ஆளும் கட்சிக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். மாநிலம் முழுவதும் பாதயாத்திரை சென்று கட்சியை பலப்படுத்தி உள்ளார். ஷர்மிளாவின் கட்சியை காங்கிரஸ் கட்சியுடன் இணைத்தால் காங்கிரஸ் மேலும் வலுப்பெறும்.

இதற்காக ஷர்மிளாவிடம் டி.கே. சிவகுமார் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்ற பிறகு 2 முறை டி.கே. சிவக்குமாரை ஷர்மிளா சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு அரசியலுக்கு அப்பாற்பட்டதாகவும் குடும்ப நண்பர் என்பதால் சந்திப்பு நடந்ததாக ஷர்மிளா தெரிவித்தார். இந்த ஆண்டு இறுதியில் தெலுங்கானாவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் ராஜ்யசபா எம்.பி. ராமச்சந்திர ராவ் மற்றும் கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் தொடர்ந்து ஷர்மிளாவை காங்கிரஸ் கட்சியில் சேரும்படி பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

இதையடுத்து ஒய்.எஸ்.ஆர். தெலுங்கானா கட்சியை காங்கிரஸ் கட்சியில் இணைக்க ஷர்மிளா சம்மதம் தெரிவித்துள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. அவ்வாறு இணைக்கப்பட்டால் ஷர்மிளா தெலுங்கானா மாநில காங்கிரஸ் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என அவரது கட்சியினர் தெரிவித்துள்ளனர். இது தெலுங்கானா அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.