மழை தொடர்பான 176 புகார்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டது- மாநகராட்சி பொறுப்பு ஆணையர் பேட்டி!!
சென்னையில் பெய்த தொடர் கனமழை காரணமாக ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தும், அதை சீரமைக்க எடுத்த நடவடிக்கை குறித்தும் மாநகராட்சி ஆணையர் (பொறுப்பு) சமீரன் கூறியதாவது:- சென்னையில் நேற்று இரவில் இருந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த மழையால் பெரிய அளவில் பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை. சராசரியாக 10 செ.மீ. அளவுக்கு மழை பெய்துள்ளது. அப்படி பெய்தாலும் பெரும்பாலான இடங்களில் வெள்ளம் தேங்கவில்லை. அயனாவரம், மயிலாப்பூர் ஆகிய இடங்களில் உள்ள சில பகுதிகள், கணேசபுரம் சுரங்கப் பாதையில் குறைந்த அளவில் தண்ணீர் தேங்கியது. அதை மோட்டார் மூலம் வெளியே எடுத்து வருகிறோம். 22 சுரங்கப் பாதைகளில் சீரான போக்குவரத்து நடந்து வருகிறது. அனைத்து சாலைகளிலும் போக்குவரத்து சீராக நடைபெற்று வருகிறது.
30 இடங்களில் மரம் விழுந்ததாக புகார் வந்தது. அவை உடனே அகற்றப்பட்டன. பொதுமக்களிடம் இருந்து நேற்று இரவு முதல் இன்று வரை கட்டுப்பாட்டு அறைக்கு 176 புகார்கள் வந்துள்ளன. இந்த புகார்கள் மீது அந்தந்த பகுதிகளில் உள்ள உதவி பொறியாளர்கள் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாநகராட்சி பணியாளர்கள் 4 ஆயிரம் பேர் நேற்று இரவில் இருந்தே சீரமைப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். சென்னையில் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டதாக 88 புகார்கள் வந்தன. மின் வாரியத்துடன் இணைந்து அதை சரி செய்ய உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து வருகிறோம். பெரிய அளவில் மின் தடை ஏற்பட்டதாக புகார் எதுவும் இல்லை. தெருக்களில் சிறிய அளவில் தண்ணீர் தேங்கியதாக 88 புகார்கள் வந்தன.
அயனாவரத்தில் மட்டும் அதிக அளவில் தண்ணீர் தேங்கியதாக ஒரே ஒரு புகார் மட்டுமே வந்துள்ளது. சுரங்கப் பாதையில் தண்ணீர் தேங்கி இருப்பதாக ஒரே ஒரு புகார் மட்டுமே வந்துள்ளது. மீதமுள்ளவை பொதுவான புகார்கள்தான். மழை பாதிப்பை தடுக்க நேற்று இரவு 12 மணியில் இருந்தே நாங்கள் முன் எச்சரிக்கையாக இருந்தோம். அதனால் பெரிய அளவில் சேதம் இல்லாமல் நடவடிக்கை எடுக்க முடிந்தது. வீடுகள் ஏதும் சேதம் அடையவில்லை. உயிர்ச் சேதமும் ஏற்படவில்லை. 10 செ.மீ. அளவுக்கு அதிகமாக மழை பெய்தாலும் மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. மழை பாதிப்பு சீரமைப்பு பணிக்கு போதுமான ஊழியர்கள் இருக்கிறார்கள்.
தூய்மை பணியாளர்களையும் இதில் ஈடுபடுத்தி உள்ளோம். அவர்கள் மழை நீர் வடிகால் பகுதிகளில் அடைப்புகளை சரி செய்து வருகிறார்கள். எனவே சாலையில் தண்ணீர் தேங்காமல் மழை நீர் வடிகாலில் ஓடிக்கொண்டிருக்கிறது. சென்னை மாநகராட்சியில் 2,800 கி.மீ. அளவுக்கு மழை நீர் வடிகால் உள்ளது. கடந்த ஒரு வருடத்தில் 800 கி.மீ. அளவுக்கு வெள்ள தடுப்பு பணிகளுக்காக மழை நீர் வடிகால் கட்டி இருக்கிறோம். இன்னும் 100 கி.மீ. தூரத்துக்கு மழை நீர் வடிகால் பணிகள் துரிதமாக நடந்து வருகிறது. அடுத்த வடகிழக்கு பருவமழைக்கு முன்னதாக சென்னை முழுவதும் இவை முழுமையாக முடிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.