இரணைமடு நன்னீர் மீன்பிடி சங்கங்களுக்கிடையே நிலவும் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் தொடர்பில் கலந்துரையாடல்!! (PHOTOS)
கிளிநொச்சி மாவட்டத்தின் இரணைமடு நன்னீர் மீன்பிடி சங்கங்களுக்கிடையிலான பிரச்சனைகளை தீர்ப்பதற்கான கலந்துரையாடல் இன்று(19) காலை கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
குறித்த கலந்துரையாடல் கடற்றொழில் அமைச்சரும், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான டக்ளஸ் தேவானந்தா அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
கரைச்சி கிராமிய மீனவர் அமைப்பு மற்றும் இரணைமடுக்குள கிராமிய நன்னீர் மீனவர் அமைப்பு ஆகிய நன்னீர் மீன்பிடி அமைப்புக்களுக்கிடையிலான பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடலாகவே அமைந்திருந்தது.
மேலும் குறித்த பிரதேச மக்களும், இரணைமடு நன்னீர் மீனவர் சங்கப் பிரதிநிதிகளும் எதிர்கொள்ளுகின்ற பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
மேலும் குறித்த குளத்தில் விடப்படுகின்ற மீன் குஞ்சுகளின் தொகையினை அதிகரிப்பது தொடர்பாகவும் விசேட கவனம் செலுத்தப்பட்டது.
மேற்குறிப்பிட்ட இரு நன்னீர் மீனவர் அமைப்புக்களுக்கிடையிலான பிரச்சினைகள் மற்றும் கோரிக்கைகளை நிறைவேற்றுவது தொடர்பில் இரு தரப்பினருக்கும் பொதுவான அறிக்கையினை தயாரித்து உடனடியாக தமக்கு சமர்ப்பித்து, அதனை நடைமுறைப்படுத்துமாறு துறைசார்ந்த அதிகாரிகளுக்கு கடற்றொழில் அமைச்சரும், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான டக்ளஸ் தேவானந்தா பணிப்புரை வழங்கினார்.
மேலும், துறைசார்ந்த திணைக்கள அதிகாரிகளால் நடைமுறைப்படுத்தும் விதிமுறைகளை மீனவர் அமைப்புக்கள் கட்டாயமாகக் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
இக் கலந்துரையாடலில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. றூபவதி கேதீஸ்வரன், பிரதேச செயலாளர்கள், துறைசார் திணைக்கள அதிகாரிகள், பிரதேச சபை செயலாளர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், இரணைமடு நன்னீர் மீன்பிடி சங்கங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டுள்ளனர்.