;
Athirady Tamil News

செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 20 அடியை நெருங்கியது!!

0

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை கொட்டி வருகிறது. நேற்று இரவும் இடி-மின்னலுடன் பல இடங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. பலத்த மழை காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி ஏரிக்கு 1649 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. இதனால் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 20 அடியை நெருங்கி உள்ளது. ஏரியின் மொத்த உயரம் 24 அடி. இதில் தற்போது 19.70 அடிக்கு தண்ணீர் உள்ளது. மொத்த கொள்ளளவான 3465 மில்லியன் கனஅடியில் 2530 மி. கன அடி தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது. ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இதைத்தொடர்ந்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஏரியின் நீர்மட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 22 அடியை நெருங்கும் வரை கண்காணித்து அதன் பிறகு உபரி நீர் திறப்பது குறித்து முடிவு செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். தொடர் மழையால் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருவதால் செம்பரம்பாக்கம் ஏரிப்பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதேபோல் புழல், சோழவரம், பூண்டி ஏரிகளுக்கும் நீர்வரத்து அதிகரித்து வருகிறது. புழல் ஏரியின் மொத்த கொள்ளளவு 3300 மி.கனஅடி. இதில் 2228 மி.கனஅடி தண்ணீர் உள்ளது.

ஏரிக்கு 781 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. சோழவரம் ஏரியின் மொத்த கொள்ளளவு 1081 மி.கனஅடி. இதில் 419 மி.கனஅடி நீர் உள்ளது. ஏரிக்கு 115 கனஅடி தண்ணீர் வருகிறது. பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவான 3231 மி.கனஅடியில் 1286 மி.கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது. ஏரிக்கு 640 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரியின் மொத்த கொள்ளளவான 500 மி.கனஅடியில் 423 மி.கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.