மகள் துஷ்பிரயோகம்: பெற்றோர் விஷம் குடித்தனர்!!
13 வயதுடைய தமது மகள் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டதை அறிந்த தந்தையும் தாயும் பொலிஸ் நிலையத்துக்குள் வைத்து விஷம் அருந்திய சம்பவம் ஒன்று வெலிமடையில் பதிவாகியுள்ளது.
சம்பவத்தையடுத்து குறித்த பெற்றோர் வெலிமடை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட குறித்த சிறுமி வெலிமடை நகரில் மாலை நேரத்தில் தனியாக இருந்ததை அவதானித்து சந்தேகமடைந்த பொலிஸார் சிறுமியை வெலிமடை பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
விசாரணையின் போது சிறுமி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், சிறுமி மருத்துவ அறிக்கையைப் பெறுவதற்காக பதுளை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து குறித்த சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளது. சம்பவம் தொடர்பில் வாக்குமூலங்களை பதிவு செய்வதற்காக சிறுமியின் தந்தை மற்றும் தாயை பொலிஸார் வெலிமடை பொலிஸ் நிலையத்துக்கு வரழைத்துள்ளனர்.
இதன்போதே மகள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டிருப்பது பெற்றோருக்கு தெரியவந்ததுடன் அதிர்ச்சியடைந்த அவர்கள் இருவரும், பொலிஸ் நிலையத்துக்குள் வைத்து விஷம் அருந்தியுள்ளனர்.
இதனையடுத்து பொலிஸார் அவர்கள் இருவரையும் உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
இதேவேளை, சிறுமியை துஷ்பிரயோகம் செய்தார் என்ற சந்தேகத்தில் வெலிமடை பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிமடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.