காதலனுக்கு ஹெல்மெட்: காதலி துஷ்பிரயோகம் !!
தன்னுடைய காதலனுக்கு தலைக்கவசம் (ஹெல்மெட்) ஒன்றை வாங்கிக் கொடுப்பதற்காக 8 ஆயிரம் ரூபாயை சேர்த்திருந்த யுவதியை ஏமாற்றி, கடத்திச் சென்று, அவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியமை மட்டுமன்றி, அந்த யுவதி வைத்திருந்த 8 ஆயிரம் ரூபாயையும் அபகரித்துச் சென்றிருந்த இளைஞனை மாதம்பே பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கடிகமுவ பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதான இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார.
இந்த யுவதியின் கையால் காதலனின் ஹெல்மெட் அண்மையில், கீழே விழுந்து உடைந்துவிட்டது. ஆகையால் புதிய ஹெல்மெட் ஒன்றை வாங்கிக் கொடுப்பதற்கு அந்த யுவதி தீர்மானித்துள்ளார்.
பாடசாலைக்குச் செல்லும் வயதுடைய மேற்படி யுவதியிடம் ஹெல்மெட் வாங்கிக்கொடுப்பதற்கு போதியளவில் பணம் இருக்கவில்லை.
ஆகையால், தனக்குத் தெரிந்த மற்றும் சந்திப்போரிடம் பணத்தை பெற்றுக்கொள்வதற்கு தீர்மானித்துள்ளார்.
கலவிடாஹா முதல் காக்கபள்ளி வரை, தனக்குத் தெரிந்தவர்களிடம் கடந்த 18ஆம் திகதி நடந்தே சென்று பணம் சேகரித்துள்ளார்.
போகும் வழியில், இளநீர் விற்றுக்கொண்டிருந்த ஒருவரிடம், தன்னுடைய நிலைமையைக் கூறி, பணம் கேட்டுள்ளார். பணத்தையும் கொடுத்த இளநீர் வியாபாரி, தாகத்தை தணிப்பதற்கு இளநீர் ஒன்றையும் வெட்டிக்கொடுத்துள்ளார்.
தன்னுடைய கதையை இளநீர் விற்பவரிடம் அந்த யுவதியை கூறிக்கொண்டிருந்த போது, அருகில் இளைஞன் ஒருவன் நின்றிருந்ததை யுவதி கவனிக்கவில்லை.
இதனிடையே அங்கு வந்த பஸ்ஸில் எறிய யுவதி, காக்கபள்ளி சந்தி வரையில் பயணித்து அவ்விடத்தில் இறங்கிக்கொண்டுள்ளார். இளநீர் கடைக்கு அருகில் நின்றுக்கொண்டிருந்த இளைஞனும் அவ்விடத்துக்கு அப்போது வந்துவிட்டார்.
அந்த யுவதியிடம் கதையைக் கொடுத்த இளைஞனிடம், ஹெல்மெட் வாங்குவதற்கு பணம் சேகரிப்பதாக கூறியுள்ளார். தன்னால் உதவ முடியுமெனத் தெரிவித்த இளைஞன், இன்னும் எவ்வளவு பணம் தேவையெனக் கேட்டுள்ளார். தேவையான பணத்தை தன்னால் தரமுடியும் என்றும் அவ்விளைஞன் தெரிவித்துள்ளான்.
அதற்காக, தன்னுடன் வருமாறு அழைத்துச் சென்ற இளைஞன், பத்திரன்டாவ பிரதேசத்தில் பாலடைந்த வீட்டுக்குள் அழைத்துச் சென்று அங்கு வைத்து அச்சுறுத்தி, பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளார்.
பாலியல் துஷ்பிரயோகம் செய்ததன் பின்னர், அந்த யுவதியிடமிருந்த 8 ஆயிரம் ரூபாயையும் அபகரித்துக்கொண்டு தப்பியோடிவிட்டார்.
தனக்கு நேர்ந்ததை தன்னுடைய பெற்றோரிடம் தெரிவித்த அந்த யுவதி, மாதம்பே பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
இந்நிலையில், தன்னுடைய காதலனை சந்திப்பதற்காக அந்த யுவதி சிலாபம் பஸ் நிலையத்துக்குச் சென்றிருந்த வேளையில், தன்னை ஏமாற்றிய இளைஞன் நிற்பதை கண்டுள்ளார். இதுதொடர்பில் பொலிஸாருக்கு தகவல் கொடுத்ததை அடுத்து அவ்விளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.