கடலூர் மாவட்டத்தில் இன்று 101.12 டிகிரி பதிவு: வெயிலின் அளவு தொடர்ந்து அதிகரிக்க காரணம் என்ன? வானிலையாளர் தகவல்!!
கடலூர் மாவட்டத்தில் மார்ச் மாதம் முதல் கோடை வெயில் தொடங்கி நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் கடுமையாக உயர்ந்து வருகின்றது. இந்நிலையில் கடந்த மே மாதம் 4-ம் தேதி அக்னி நட்சத்திரம் தொடங்கி மே 29-ந்தேதி முடிவடைந்தது. இதனை தொடர்ந்து வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் குறையும் என எதிர்பார்த்த நிலையில் கடந்த 15 நாட்களாக கடலூர் மாவட்டத்தில் 102 முதல் 104 டிகிரி வெயில் அளவு பதிவாகி வருவதோடு, அனல் காற்று வீசி வருவதால் பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் கடுமையாக பாதிப்படைந்து வருகின்றனர். இதன் காரணமாக பொதுமக்களின் நடமாட்டம் குறைந்து காணப்பட்டு வருவதோடு, பழச்சாறுகள், நுங்கு, கரும்பு சாறு, குளிர்பானங்கள் போன்றவற்றை அருந்தி வெயிலின் தாக்கத்தை பொதுமக்கள் குறைத்து வருகின்றனர். இருந்த போதிலும் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்ததால் கடந்த சில தினங்களாக வெப்ப சலனம் காரணமாக கடலூர் மாவட்டத்தில் பரவலாக பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருவதும் குறிப்பிடத்தக்கதாகும்.
மேலும் காலை நேரங்களில் கடும் வெயில், மாலை நேரங்களில் குளிர்ந்த காற்றுடன் மழை பெய்து வந்ததால் சீதோஷ்ண மாற்றமும் ஏற்பட்டு உள்ளது. கடலூர் மாவட்டத்தில் நேற்று அதிகபட்ச வெயிலாக 104.36 டிகிரி அளவில் வெயில் அளவு பதிவாகி கடும் பாதிப்பை ஏற்படுத்தி இருந்தது. இன்று காலை 11.30 நிலவரப்படி 101.12 டிகிரி வெயில் அளவு பதிவாகி உள்ளது. இதுகுறித்து வானிலையாளர் பாலமுருகனிடம் கேட்டபோது, கடலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கடும் வெயில் காரணமாக மக்கள் அவதி அடைந்து வருவதை காண முடிகிறது. மேலும் சில நாட்களாக 100 டிகிரிக்கு மேல் வெயிலின் அளவு பதிவாகி வருவதால் அனல் காற்று வீசி வருவதோடு வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
கடலூர் மாவட்டத்தில் மேற்கு மற்றும் வடமேற்கு பகுதிகளில் இருந்து கடுமையான அனல் காற்று வீசி வருவதால் வறண்ட வானிலை ஏற்பட்டு கடும் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகின்றது. மேலும் தென்மேற்கு பருவமழை தமிழகத்தில் சரியான முறையில் நிலை கொண்டு மழை அதிகளவில் பெய்து வந்தால் மட்டுமே வெயிலின் தாக்கம் குறைய வாய்ப்புண்டு. இது மட்டுமின்றி கிழக்கு திசையில் இருந்து வரக்கூடிய ஈரப்பதகாற்று சரியான முறையில் வரவில்லை. ஆகையால் தமிழக அரசின் அறிவுறுத்திலின் பேரில் பொதுமக்கள் காரணமின்றி வெளியில் சுற்றுவதை குறைத்துக் கொண்டு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என கூறினார்.