உறவின் ஆழத்தை வெளிப்படுத்த அமெரிக்க பயணம் ஒரு வாய்ப்பாக இருக்கும்: பிரதமர் மோடி!!
பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை அமெரிக்காவிற்கு விமானத்தில் புறப்பட்டார். மோடி அமெரிக்காவில் 3-நாள் சுற்றுப்பயணம் செய்யவிருக்கிறார். இந்த பயணத்தின் மூலம் இரு நாடுகளுக்கிடையே உள்ள உறவு மேலும் வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவில் இருந்து இந்தியா திரும்புவதற்கு முன் அவர் எகிப்து நாட்டிற்கும் செல்கிறார். இந்த இரு பயணங்கள் குறித்து மோடி கூறியதாவது:- இந்திய-அமெரிக்க உறவின் ஆழம் மற்றும் பன்முகத்தன்மையை வெளிப்படுத்த அமெரிக்க பயணம் ஒரு வாய்ப்பாக இருக்கும். பொதுவான உலகளாவிய சவால்களை சந்திப்பதில் இரு நாடுகளும் வலுவான நிலைப்பாட்டை கொண்டிருக்கின்றன.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் ஜில் பைடன் ஆகியோரின் அழைப்பின் பேரில், நான் அரசு முறை பயணமாக அமெரிக்கா செல்கிறேன். இந்த சிறப்பு அழைப்பின் பிரதிபலிப்பு இரு ஜனநாயக நாடுகளுக்கிடையேயான கூட்டுறவின் வீரியம் மற்றும் உயிர்ச்சக்திகளின் பிரதிபலிப்பாக திகழ்கிறது. ஜனாதிபதி பைடன் மற்றும் அந்நாட்டின் பிற மூத்த தலைவர்களுடனான கலந்துரையாடல், அமெரிக்காவுடனான இருதரப்பு ஒத்துழைப்பையும், ஜி20, குவாட், மற்றும் இந்தோ-பசிபிக் பொருளாதாரச் செழுமைக்கான கட்டமைப்பு (IPEF)போன்ற பலதரப்பு மன்றங்களிலும் ஒருங்கிணைந்து செயலாற்ற வாய்ப்பளிக்கும்.
எகிப்து அதிபர் அப்தெல் ஃபத்தாஹ் எல்-சிசியின் அழைப்பின் பேரில் வாஷிங்டன் டி.சி.யிலிருந்து கெய்ரோவுக்கு பயணிக்கவுள்ளேன். ஒரு நெருக்கமான, நட்பு நாட்டிற்கு முதன்முறையாக அரசுமுறை பயணத்தை மேற்கொள்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். ஜனாதிபதி சிசி மற்றும் எகிப்திய அரசாங்கத்தின் மூத்த உறுப்பினர்களுடனான நமது நாகரீக மற்றும் பன்முக கூட்டுறவிற்கு மேலும் வேகத்தை வழங்க எனது கலந்துரையாடல்களை எதிர்நோக்குகிறேன். எகிப்தில் உள்ள துடிப்பான இந்திய புலம்பெயர்ந்தோருடன் தொடர்புகொள்வதற்கான வாய்ப்பையும் ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளேன். இவ்வாறு பிரதமர் மோடி கூறி உள்ளார்.