பஞ்சாப் சட்டசபையிலிருந்து காங்கிரஸ் வெளிநடப்பு: கேள்வி நேரம், பூஜ்ய நேரம் இல்லாததால் எதிர்ப்பு!!
பஞ்சாப் மாநிலத்தில் முழு பெரும்பான்மையுடன் ஆம் ஆத்மி கட்சி ஆளும் கட்சியாக இருந்து வருகிறது. கடந்த வருடம், பாஜக தனது ‘ஆபரேஷன் லோட்டஸ்’ திட்டத்தின் ஒரு பகுதியாக, பகவந்த் மான் தலைமையிலான ஆம் ஆத்மி அரசை கவிழ்க்கும் முயற்சியில், குறைந்தபட்சம் 10 ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களை அணுகி தலா ரூ.25 கோடி வழங்க முன்வந்ததாக ஆம் ஆத்மி கட்சி குற்றம்சாட்டியது. அத்துடன், பாஜகவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சட்டசபையில் நம்பிக்கை தீர்மானம் கொண்டு வந்தனர். இந்த வாக்கெடுப்பில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றது. Powered By VDO.AI Video Player is loading.
இந்நிலையில், பஞ்சாப் சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் நேற்று தொடங்கியது. இரண்டு நாள் சிறப்பு அமர்வில், கேள்வி நேரமோ, பூஜ்ஜிய நேரமோ இல்லாததால், காங்கிரஸ் உறுப்பினர்கள் கோஷங்கள் எழுப்பியவாறு அவையிலிருந்து இன்று வெளிநடப்பு செய்தனர். இதுபற்றி எதிர்க்கட்சித் தலைவர் பார்தப் சிங் பஜ்வா கூறுகையில், “கேள்வி நேரமோ அல்லது பூஜ்ஜிய நேரமோ எடுக்கப்படாவிட்டால், விதான சபாவின் நோக்கம் என்ன?” என்று கேள்வி எழுப்பினார். சபையில் இருந்து வெளிநடப்பு செய்வதற்கு முன்பு பாஜ்வா பேசுகையில், “ஆம் ஆத்மி அரசாங்கம் ஒன்பது மாதங்களுக்கு முன்பு ஒரு அமர்வைக் கூட்டி, மாநில அரசை கவிழ்க்க பா.ஜ.க., ‘ஆபரேஷன் தாமரை’ எனப்படும் ஒரு திட்டத்தை செயல்படுத்தி வருவதாக குற்றஞ்சாட்டியிருந்தது.
ஆனால் இதுவரை இந்த குற்றச்சாட்டின் மேல் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை. இதில் யார் யார் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்பது எங்களுக்கு தெரியப்படுத்தவேண்டும்” என்று கூறினார். ‘ஆபரேஷன் தாமரை’ குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்ட அறிக்கை என்ன என்பதை சபையில் தாக்கல் செய்யக் கோரி சபாநாயகர் சந்த்வானுக்கு பாஜ்வா கடிதம் எழுதியிருந்தார். இது குறித்து சபாநாயகர் குல்தார் சிங் சந்த்வான் பேசும்போது, இந்த விவகாரத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், போலீசார் விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவித்தார்.