அமெரிக்காவில் ஜூன்டீன்த் கொண்டாட்டத்தில் துப்பாக்கி சூடு- 6 பேர் காயம்!!
அமெரிக்காவில் ஜூன் 19ம் தேதியை ஜூன்டீன்த் (Juneteenth) என்ற பெயருடன் அடிமைத்தனம் ஒழிக்கப்பட்ட நாளாக கொண்டாடி வருகின்றனர். ஜோ பைடன் அரசாங்கம், 2021ம் வருடம் முதல் அமெரிக்காவில் உள்ள தேசிய விடுமுறை நாட்களில் ஒன்றாக இதை கொண்டாட ஒப்புதல் வழங்கியதிலிருந்து, இது நாடெங்கிலும் கொண்டாடப்படுகிறது. இந்த விடுமுறை நாட்களில் இளைஞர்கள் ஆங்காங்கே கொண்டாட்டங்களில் ஈடுபடுவது வழக்கம். அவ்வகையில் நேற்று நடைபெற்ற ஜூன்டீன் கொண்டாட்டத்தின் நிறைவில் துப்பாக்கி சூடு நடந்திருக்கிறது. இதில், சிறுவர், சிறுமிகள் உள்பட 6 பேர் பலத்த காயமடைந்துள்ளனர்.
இந்த துப்பாக்கி சூடு மாலை 04:20 மணியளவில் மில்வாக்கி நகரில் கிரேட்டர் பிலடெல்பியாவில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் நடந்ததாக நேரில் பார்த்தவர்களும், நேரில் படம் பிடித்த ஒருவரும் உறுதிப்படுத்தினர். இது பற்றி மில்வாக்கி காவல்துறை தலைமை அதிகாரி ஜெஃபரி நார்மன் கூறியிருப்பதாவது: துப்பாக்கி சூட்டில் காயமடைந்த 6 பேரில் ஒரு சிறுவன் துப்பாக்கி வைத்திருந்ததாகவும், அவன் குற்றவாளியாக இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. அவனிடம் விசாரணை நடத்தப்படுகிறது. துப்பாக்கிச் சூடுக்கான காரணம் தெரியவில்லை. உயிருக்கு ஆபத்தான அளவில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. 8 வருடங்களாக இந்த நிகழ்ச்சி எந்த அசம்பாவிதங்களும் இல்லாமல் நடைபெற்று வந்தது. மில்வாக்கீ நகரின் குழந்தைகளுக்கு என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. இந்த வன்முறை ஒழிக்கப்பட வேண்டும்.
பெற்றோர், பாதுகாவலர்கள், பெரியவர்கள், அனைவரும் கைத்துப்பாக்கி, அபாயகரமான ஆயுதங்கள் ஆகியவற்றை குழந்தைகளின் கைகளுக்கு கிடைக்காமல் பார்த்து கொள்வதற்கு ஒருங்கிணைந்து செயலாற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். ஜூன்டீன்த் கொண்டாட்டத்தில் நடைபெற்ற வன்முறைகள் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று மில்வாக்கீ மேயர் கவாலியர் ஜான்சன் கூறியிருக்கிறார். துப்பாக்கி சூடு நடந்த இடத்தில் எடுக்கப்படட வீடியோ பேஸ்புக்கில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதில், துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் இரண்டு இளைஞர்கள் நடைபாதையில் சிகிச்சை பெறும் காட்சி அந்த வீடியோவில் பதிவாகி உள்ளது.